வழிகாட்டும் குறள் மணி (41).
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்(திருக்குறள் 428)
பொருள்:
அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாமல் இருப்பது அறிவின்மை, அச்சப்பட வேண்டியவற்றிக்ற்கு அச்சப்படுதல் அறிவுடையோர் செயலாகும்.
விளக்கம்:
கடலில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்பட வேண்டும். அச்சப்படாமல் இறங்கி மாணவர்கள் பலர் தொடர்ந்து இறந்து கொண்டிருப்பதை இந்த குறளுக்கு சான்றாக கூறலாம்.
தலைநகர் சென்னையில் பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி கல்வியை முடித்ததும் கணிசமான எண்ணிக்கையில் உயர்கல்வி பெற சென்னைக்கு வந்து இங்குள்ள விடுதிகளில் தங்குகிறார்கள்.
விடுமுறை தினங்களில் இவர்கள் நண்பர்களுடன் கடற்கரைக்குச் சென்று விளையாடிவிட்டு, ஒரு கட்டத்தில் பயமின்றி கடலில் இறங்கி குளிக்கிறார்கள். நீரோட்டமும் கணிக்க முடியாத சுழலும் அலைகளும் உள்ள கடலில் சிக்கி மாணவர்கள் பலர் உயிரிழக்கிறார்கள்.
உயர்கல்வி முடித்து மதிப்புமிக்க பட்டத்துடன் பிள்ளை ஊர் திரும்புவான் என்று பெற்றோர்கள் காத்திருக்க, உயிரற்ற உடல் வந்து ஊர் சேர்வதும் அதைப்பார்த்து பெற்றோர் போடும் கூக்குரலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து கொண்டிருப்பதால் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.
தமிழக கடற்கரையின் நீளம் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் காவல்துறையாலோ அரசாங்கத்தாலோ இந்த நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலாது.
இதுபோல அச்சப்பட வேண்டியவற்றிற்கு அச்சப்பட்டு அறிவுடையோராக நடந்து கொள்ளுங்கள் என்று குறள் அறிவுறுத்துகிறது.
