தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த 34 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டது. காவல் துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கை.
சுகாதாரத் துறை செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் திரு. லால்வேணா, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி, காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் ஆகியோரது ஒருங்கிணைப்பில்,
காவல் துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து, பான்மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததாக, மாவட்டத்தில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் பெறப்பட்ட பரிந்துரையின் படி, 34 கடைகளை மூடி சீல் வைக்க மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் உத்திரவிட்டதனையடுத்து, கடந்த ஒரு வாரத்தில் 34 கடைகளும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் மூடி, சீல் வைக்கப்பட்டு, அக்கடைகள் உணவு பாதுகாப்புத் துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டன.
விசாரணை நிறைவுற்ற பின்னர், உணவு பாதுகாப்புத் துறை சார்ந்த குற்றத்தை உறுதி செய்து, நியமன அலுவலரால் அபராதம் விதித்து உத்திரவிடப்படும். சம்பந்தப்பட்ட வணிகர்கள் விதிக்கப்பட்ட அபராதத்தினை கருவூலத் துறையின் இணையதளம் மூலமாக செலுத்தி, அதற்கான சலான் நகலை நியமன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னரே, கடைகள் மீண்டும் திறக்கப்படும்.
தவறினால், அபராதம் செலுத்தும் காலம் வரை கடைகள் மூடி, சீல் வைத்த நிலையிலேயே இருக்கும்.
மேலும், காவல் துணை கண்காணிப்பாளர்களின் பரிந்துரை பெறப்பட்ட மற்ற 120 கடைகளும் அடுத்துவரும் தினங்களில் ஆய்வு செய்யப்பட்டு, மூடி சீலிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, காவல் துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்தும், தனித்தனியாகவும் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில், 125 கடைகள் இரண்டு துறைகளின் கூட்டாய்விற்கு உட்படுத்தப்பட்டு, ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு, அக்கடை மூடி சீல் வைக்கப்பட்டது. உணவு பாதுகாப்புத் துறை தனியாக 129 கடைகளை ஆய்வு செய்துள்ளது. காவல் துறை தனியாக ஆய்வு செய்து, வீடுகளிலும், கடையிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 400 கிலோ தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைத் துவங்கப்பட்டுள்ளது.
காவல் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களின் ஆய்வின் போது, உணவு வணிகர்கள் எவரேனும் பான்மசாலா, குட்கா, பதப்படுத்தப்பட்ட மெல்லும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடையானது உடனடியாக மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்படுகின்றது.
இந்த விஷயத்தில் எந்த வணிகருக்கும் கருணையோ அல்லது சலுகையோ காண்பிக்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனை குறித்தோ அல்லது அதை விற்கும் கடைகள் குறித்தோ புகார் அளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கு அனுப்பலாம். புகாரை பெற்றுக்கொண்ட அடுத்த 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், புகார் அளிப்பவரது விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்,
தெரிவித்துள்ளார்.
.jpg)