போபால்: ம.பி.,யில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 150க்கும் மேற்பட்ட தொகுதியில் பாஜ., முன்னிலை வகிக்கிறது. ம.பி.,யில் 5வது முறையாக அரியணை ஏறும் சிவராஜ் சிங் சவுகான் அசைக்க முடியாத முதல்வராக திகழ்கிறார்.
ம.பி.,யில் 2003, 2008, 2013 மற்றும் 2020ல் பா.ஜ., 4 முறை ஆட்சி அமைத்தது. இந்த 4 முறையும் முதல்வர் பதவி சிவராஜ் சிங் சவுகானுக்கு வழங்கப்பட்டது. சிவராஜ் சிங் சவுகான் மக்கள் பணியை சிறப்பாக ஆற்றி வருகிறார் என மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரத்தில் பாராட்டி இருந்தனர்.
நான் 5வது முறையாக முதல்வராவேன், ம.பி., மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என சவுகான் கூறியிருந்தார்.
அவர் கூறியது போல், தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது முதல் பாஜ., முன்னிலை வகிக்கிறது.
தற்போது நிலவரப்படி, 230 தொகுதிகளில் 150க்கும் மேற்பட்ட தொகுதியில் பாஜ., முன்னிலை வகிக்கிறது. இதனால் 5வது முறையாக அரியணை ஏறும் வாய்ப்பு சிவராஜ் சிங் சவுகானுக்கு கிடைக்க உள்ளது.
யார் இந்த சிவராஜ் சிங் சவுகான்?
மூத்த பா.ஜ., தலைவர் சிவராஜ் சிங் சவுகான் மத்தியப்பிரதேச முதல்வராக உள்ளார். 4 முறை முதல்வராக பதவியேற்றுள்ளார். 2018ம் ஆண்டு இவருடைய தலைமையில் பா.ஜ., தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ., தோல்வியை சந்திக்க நேரிட்டது.
ஆனால், 15 மாதங்களுக்குப் பிறகு காங்கிரசில் கிளர்ச்சி ஏற்பட்டபோது அக்கட்சியின் சிந்தியாவை தன் பக்கம் இழுத்து, மீண்டும் பா.ஜ., ஆட்சியை மாநிலத்தில் மலர செய்தார் சிவராஜ் சிங். இது தவிர, காங்கிரசுக்குள் ஏற்பட்ட கோஷ்டி பூசலின் விளைவுகளும் பா. ஜ.,வுக்கு சாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
