உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் : சிலுவையைச் சுமந்து சித்திரவதைகளைத் தாங்கி, கல்வாரியில் இரத்தம் சிந்திய இயேசு பெருமானின் மனித நேய அமுத மொழிகள், தமிழ்நாட்டுக்கு இன்றியமையாத தேவை!!! மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ வாழ்த்து!!

sen reporter
0


 உலகெங்கிலும் போராட்டங்களும், துன்பங்களும் நிறைந்த மனித வாழ்வில், இதயக் காயங்களுக்கு மருந்தாகவும், வாழ்வின் அறைகூவல்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையாகவும், மனித குலத்துக்கே நீதிமொழிகளையும், உபதேசங்களையும் தந்த இரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை,


 கிறிஸ்துமஸ் பண்டிகை திருநாளாக, தரணியெங்கும் கிறித்துவப் பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள்.


தமிழகத்தைப் பொறுத்தமட்டில், இயேசு திருச்சபையினர் தமிழ் மொழிக்காகவும், அதன் உயர்வுக்காகவும், ஏழை எளிய மக்களின் பிணித் துன்பத்தைப் போக்குவதற்காகவும், பாமர மக்களுக்குச் சிறந்த கல்வியைப் போதிப்பதற்காகவும், ஆற்றி இருக்கின்ற அருந்தொண்டு, ஈடு இணையற்றது ஆகும்.


திராவிட மொழிகளின் ஒப்பு இலக்கணம் தந்த கால்டுவெல்;


 திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி ஆக்கம் செய்த ஜி.யு. போப்; தேம்பாவணி தந்த வீரமா முனிவர்; தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்கு; கடற்கரை வாழ் மக்களுக்குத் தொண்டு ஊழியம் புரிந்த புனித சேவியர் அடிகளார், திருச்சபை சேவை செய்து கொலையுண்டு மடிந்த தோமையார், ஜான் பிரிட்டோ உள்ளிட்ட இயேசு சபை அருட் தந்தையரும், போதகர்களும் ஆற்றிய அரும்பணிக்கு, தமிழ் இனம் நன்றிக்கடன்பட்டு இருக்கின்றது.


பகையும் வெறுப்பும் வளர்ந்து, படுகொலைகளும் பஞ்சமா பாதகங்களும் அனைத்து மக்களையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய அபாயகரமான சூழல் வளர்ந்து வரும் இன்றைய நிலையில், சிலுவையைச் சுமந்து சித்திரவதைகளைத் தாங்கி, கல்வாரியில் இரத்தம் சிந்திய இயேசு பெருமானின் மனித நேய அமுத மொழிகள், தமிழ்நாட்டுக்கு இன்றியமையாத தேவை ஆகும்.


உயர்ந்த இலட்சியங்களுக்காகப் போராடுகின்றவர்களுக்கு, சோதனைகளும் தோல்விகளும் அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றை நெஞ்சுறுதியோடு தாங்கிக் கொண்டு, நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில், விவிலியத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளான, ‘அவர் நியாயத்துக்கு வெற்றி கிடைக்கப் பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் என்ற சொற்களை, மந்திரச் சொற்களாக மனதில் கருதி, தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக்கும், தமிழ் ஈழ விடியலுக்கும் உறுதி எடுப்போமாக!


அன்பையும், கனிவையும் பரிமாறும் நேசர்களாகிய கிறித்துவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மனமகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


என தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுசெயலாளர் திரு.வைகோ கூறியுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top