சிதம்பரம்: உபரிநீரை வெளியேற்ற பூமிக்கடியில் சுரங்க நீர் வடிகால் பாதை! உலகிலிலேயே வெறெங்கும் இல்லாத அதிசயம்! ஆய்வாளர்கள் தகவல்!!

sen reporter
0
சிதம்பரம்:40 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற பூமிக்கடியில் சுரங்க நீர் வடிகால் பாதை!
உலகிலிலேயே வெறெங்கும் இல்லாத அதிசயம்.
ஆய்வாளர்கள் தகவல்.


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13ம் நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் நீரினை கொண்டு சென்று வெளியேற்றி உள்ளனர் என அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

 பூமிக்கடியில் கால்வாய் அமைப்பு:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து நிலவறை கால்வாய் வழியாக மழைக் காலங்களில் வரும் உபரிநீரினை கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லை காளிகோயில் சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வண்ணம் நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தொல்லியல் ஆய்வாளர்கள் ஜே.ஆர்.சிவராம கிருஷ்ணன், பேராசிரியர் பி.கலைச்செல்வன் மற்றும் ஆய்வு மாணவர்கள் சுசேந்திரன், ராஜராஜன், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது. ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்தது: 


இந்த கால்வாய் மூலம் பள்ளமான பகுதியான தெற்கிலிருந்து, மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பள்ளமான பகுதியிலிருந்து, மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் இதுபோன்று அமைக்கப்படவில்லை.
கால்வாய் ஒரு இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாகவும் என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். 

இந்த சிறந்த நீர் மேலாண்மை குறிப்பாக பராந்தகசோழன் கீழணையிலிருந்து மேடான பகுதியான வீராணம்ஏரிக்கு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி வடவாறு வழியாக நீர்கொண்டு செல்ல வாய்க்கால் அமைத்துள்ளனர்.

 பாம்பு போல வாய்க்கால் இருந்தால், தண்ணீ்ர் பனை ஏறும் என்ற பழமொழி இதற்கு பொருந்தும். நீரை எளிதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தவும், சேமிக்கவும் சிறந்த நீர்பாசன மேலாண்மை நிர்வாகிகளாக சோழர்கள் இருந்துள்ளனர் என்பதை இத்தொழில்நுட்பம் காட்டுகிறது.

நிலவறை கால்வாய் 1250 மீட்டர் நீளம் கொண்டது. நிலமட்டத்திலிருந்து 119 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயின் உள்அளவு உயரம் 77 செ.மீ, அகலம் 63 செ.மீ ஆகும்.

 இக்கட்டமைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர். இவைகள் 24X15X5 செ.மீ நீள, அகலங்களை கொண்டதாகும். 1:3:5 என்ற சரியான அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் இந்த கட்டுமானத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். 

குறிப்பாக செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் 2 அடி அகலம், 5 அடி நீளம் பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது.

பிற்கால சோழர் காலம்: இந்த கால்வாயின் கட்டுமான அமைப்பும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும் போது பிற்கால சோழர்கள் காலத்தில் அதாவது கிபி 10-13ம் நூற்றாண்டில் இக்கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 இதுபோன்ற கால்வாய் அமைக்கும் திட்டம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொஹஞ்சாரா, ஹரப்பா உள்ளிட்ட பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீக மக்கள் பயன்படுத்தி உள்ளனர். அதே தொழில்நுட்பத்தை தமிழர்களும் பயன்படுத்தியுள்ளதனால், சிந்து சமவெளி நாகரீகத்திற்கு நிகரான  தொழில்நுட்ப அறிவுடன் தமிழர்கள் விளங்கியதை எண்ணி பெருமை கொள்ளலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top