தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு விரைவாக இன்சூரன்ஸ் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேஷனல் இன்சூரன்ஸ் சேர்மன் ராஜேஸ்வரி சிங் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகரில் கடந்த 17,18ம் தேதிகளில் பெய்த கன மழை காரணமாக மாவட்டத்தின் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்ததுடன் இந்த மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் கார் லாரிகள் சரக்கு வாகனங்கள் பள்ளி வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் அனைத்தும் சேதம் ஆகியுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களையும் இழந்துள்ளனர்.
அதிகனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இன்சூரன்ஸ் செய்திருந்தால் அவர்களது இரு சக்கர வாகனம், கார் மற்றும் சரக்கு வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வீடு ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்க நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன சேர்மன் ராஜேஸ்வரி சிங் கூறுகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்சூரன்ஸ் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இதற்காக தனியாக நோடல் ஆபீசர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பொது மக்களுக்கு விரைவாக இன்சூரன்ஸ் தொகை கிடைக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு விரைவில் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.