நாகர்கோவில் கல்லூரி சாலை ரவுண்டானாவில் சுமார் 50 வருடகாலமாக பாகுலேயன் என்பவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கே அவரது நண்பர் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் என்பவர் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.
வழக்கம்போல் இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் சந்திரன் மற்றும் பாகுலேயன் இருவரும் கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கே வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் முகவரி விசாரிப்பது போல் விசாரித்துள்ளனர்.
பின்னர் திடீரென கடையின் முன்பு நாட்டு எறிகுண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
உடனே இது குறித்து பாகுலேயன் வடசேரி காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக நாட்டு எறிகுண்டு வீசப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமாக என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.