தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவலம்.
இரத்தம், சதை படிந்த அறுவைசிகிச்சை கத்தரி மற்றும் அறுவைசிகிச்சை உபகரணங்களை சிறுவன் கையால் கழுவச் செய்த தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியம்.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்;
எனது குடும்ப உறுப்பினரின் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்று சொல்லப்படும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஏற்கனவே பல்வேறு வகையில் அவ்வப்போது இது போன்றும் வேறுவகையிலும் அவலங்கள் தொடர்ந்தாலும், மாறுவதற்கு வழியின்றி இருக்கிறது மருத்துவமனை.
ஏழை மக்களின் கோயிலா கருதப்படும் அரசு மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வேதனைக்குரியதாகிறது.
மருத்துவமனையில் மருத்துவர்களோ, செவிலியர்களோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக தெரியவில்லை. மாறாக பயிற்சி மருத்துவர்கள், மருத்துக்கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
மருத்துவமனைகளில், செவிலியர்கள் என்பவர்கள் மிகவும் அர்ப்பணிப்போடு, நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வதையும், அவர்களின் காயங்களை சுத்தம் செய்து கட்டு போடுவதும் நடைமுறையில் உள்ள ஒன்று.
ஆனால், தற்போது, செவிலியர்கள் அந்த பணியை செய்வதில்லை. அவர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் டேட்டா என்டரி வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறனர். நோயாளிகளுக்கு டிரிப்ஸ் ஏற்றும் பணியினைகூட செவிலியர் பள்ளி மாணவிகள் தான் செய்கின்றனர்.
பயிற்சி என்பது அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் செய்யும் வேலையை பார்த்து, பயிற்சி எடுக்கும் மருத்துவர்கள், செவிலியர் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்,பயிற்சி மருத்துவர்களும், மருத்துக்கல்லூரி மாணவர்களும், செவிலியர் பள்ளி மாணவிகளும்தான் மருத்துவம் பார்க்கின்றனர்.
மருத்துவர்கள் விசிட் என்கிற பெயரில் பார்வையிட்டு செல்கின்றனர். அரசு மருத்துமனை என்பது ஏழைஎளிய மக்களை வைத்து பயிற்சி எடுத்துக் கொள்ளும் புராஜக்ட் களமாகவே செயல்பட்டு வருவது கண்டு அங்கு வரும் நோயாளிகள், உறவினர்கள் மிகவும் வேதனையடைகின்றனர்.
அதில் ஒரு சம்பவம்தான், நோயாளிகளின் காயங்களை சுத்தம் செய்து கட்டுப்போடும் பயிற்சி மருத்துவர்கள், அந்த நோயாளிகளுக்கு பயன்படுத்திய இரத்தம், சதை படிந்த கத்தரிக்கோல் மற்றும் கத்தியை அவர்களுக்கு உதவியாக இருக்கும் உறவினர்களிடம் கொடுத்து கழுவித் தரச் சொல்கின்றனர்.
இது பலரையும் அதிர்ச்சியடைய செய்கிறது. அதிலும், காலில் வெட்டுப்பட்டு சிகிச்சைக்காக வந்த ஒரு நடுத்தர வயது ஆணின் காயத்தை சுத்தம் செய்த இரத்தம், சதை படிந்த கத்திரிக்கோல் மற்றம் கத்தியை அவரின் மகன் (சுமார் 12 வயது இருக்கும்) கழுவ சொல்லி சிறுவனும் கழுவி செல்கிறான்.
கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் சுமார் 3 மணிநேரம் தூத்துக்குடி மருத்துவமனையை ஆய்வு செய்தார். கலெக்டர் அவர்களுக்கு, பணிவான வேண்டுகோள், தயவுசெய்து நீங்கள் கலெக்டராக ஆய்வுக்கு சென்றால் அங்கு என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு சாதாரண குடிமகனாக மாறுவேடத்தில் நீங்கள் மருத்துவமனைக்கு சென்றால்தான் அங்கு நடக்கும் உண்மை உங்களுக்கு தெரியவரும். என்கின்றனர் அங்குள்ளவர்கள்.
இன்னும் சொல்லப்போனால், மருத்துக்கல்லூரி மருத்துவமனை என்று உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களே இல்லை. உதாரணமாக சிறுநீரக நோய்களுக்கு இங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் அவல நிலைதான் நிலவுகிறது.
தமிழக அரசின் மருத்துவத்துறை நிர்வாகமும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் இவ்வாறான அவலநிலையை போக்கிட உரிய ஆய்வினை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பினரும் கண்ணீரோடு கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த நிலைமாறுவதற்கு மாவட்ட ஆட்சியர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், முதல்வர் கவனத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பார்களா?
