கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூரைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன் - அன்னபூரணி தம்பதியினர். இவர்களுடைய மகன்கள் சந்தோஷ்குமார், ராஜேஷ். இவர்களது மூத்த மகன் சந்தோஷ்குமாருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்து, தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார்.
இவர்களது இரண்டாவது மகன் ராஜேஷ் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். இதனால் இவர் தினமும் தனது தாய், தந்தை மற்றும் அண்ணனை தொடர்பு கொண்டு செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் ராஜேஷ் அவர்கள் மூன்று பேரையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்.
ஆனால் யாரும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த ராஜேஷ், தனது உறவினர் ஒருவருக்கு அலைபேசியில் அழைத்து தனது வீட்டிற்கு சென்று பார்க்கச் சொல்லியுள்ளார்.
அதையடுத்து அங்கு சென்ற உறவினர் வீடு பூட்டப்பட்டிருந்ததால் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கும் மூவரையும் காணவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் விவசாய நிலத்தில் உள்ள கரும்பு பயிர்களுக்கு இடையே சென்று தேடிப் பார்த்துள்ளனர். அப்போது அங்கு ராதாகிருஷ்ணன், சந்தோஷ்குமார் மற்றும் அன்னபூரணி ஆகிய மூன்று பேரும் உடலில் வெட்டுக்காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.