மதுரையில் அரசு பள்ளியை தரம் உயர்த்துவதற்கு தனது பல கோடி மதிப்புள்ள நிலத்தை வங்கி ஊழியர் தானமாக கொடுத்த நிலையில், அவரை நேரடியாக தேடிச் சென்று சந்தித்துள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி
மதுரையைச் சேர்ந்த கனரா வங்கி ஊழியர் ஆயிபூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன்.
இவர்களது மகள் ஜனனிக்கு ஒரு வயதாகும் போது கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு உக்கிர பாண்டியன் விபத்தில் காலமானார்.
அதன்பிறகு தனது மகளை படிக்க வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகளும் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தனது மகள் ஜனனியின் நினைவாக மதுரை கொடிக்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
இதனையறிந்த மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன்,
ஆயிபூரணத்துக்கு அவர் பணியாற்றும் கனரா வங்கிக்கே நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் குறிப்பிடுகையில்,
ஆயிபூரணம் அம்மாவினுடைய கைகளை பற்றிக் கொள்ளவில்லை என்றால் நான் மக்கள் பிரதிநிதி இல்லை. அள்ளிக் கொள்வதற்கு நிறைய கைகள் உள்ளன? ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கு என்று சில கைகள் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
ஆயிபூரணம் அம்மாவை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்குதல் எனது கடமையென நினைக்கிறேன் என்று குறிப்பிட்ட வெங்கடேசன்,
ஆயிபூரணம் அம்மாள் ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசு பள்ளிக்கு 4.50 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி ஆகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, அரசு பள்ளியை உயர்நிலை பள்ளியாக மாற்றுவதற்கு இந்த நிலத்தை கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இடத்தை பள்ளி கல்வி துறை அதிகாரியிடம் பதிவு செய்து கொடுத்துவிட்டு சத்தம் இல்லாமல் வந்து கனரா வங்கியில் ஊழியராக தனது அன்றாடப் பணி செய்து கொண்டிருக்கின்றார்.
இப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மாணிக்கங்கள் என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் பணம்தான் பெரிது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதைவிட பெரியது உலகில் நிறைய உண்டு. ஆயிபூரணம் அம்மாவின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு சொல்கிறது.
அந்த வகையில் மதுரையின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பூரணம் அம்மாவை நான் நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன் என்று கூறியுள்ளார்.
