தூத்துக்குடி அருகில் உள்ள மாப்பிள்ளையூரனி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையா முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து பகுதியில் மழை நீரை அகற்றுவதில் பஞ்சாயத்து துணை தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் மேற்கு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பஞ்சாயத்து துணைத் தலைவி தமிழ்ச்செல்வியின் கணவர் கணேசன் மகன் கலைச்செல்வன் ஆகியோர் ஆனந்த், மணி ஆகியோரை அறிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இது தொடர்பாக பஞ்சாயத்து துணைத் தலைவியின் வீட்டை ஒரு தரப்பினர் அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்கு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாக்குதலில் காயம் அடைந்த ஆனந்த் மற்றும் மணி ஆகியோர் மீது சிஎஸ்ஆர் ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தாளமுத்து நகர் காவல் நிலையம் மற்றும் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலவரம் அறிந்து அங்கு வந்த மாப்பிள்ளையூரனி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தங்கள் மீது போட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் மேலும் துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் பஞ்சாயத்து தலைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப் போது அந்த பகுதிக்கு வந்த பஞ்சாயத்து துணைத்தலைவி தமிழ்ச்செல்வி ஆதரவாளர்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தனர்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினரும் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் முன்னிலையில் மோதல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து அந்த பகுதிக்கு வந்த தாளமுத்துநகர் காவல்துறையினர் இரு பிரிவினரையும் தனித்தனியே அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சுமார் அரை மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாயத்து அலுவலகத்தில் இரு தரப்பினர் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முன்னிலையில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.jpg)