தமிழ்நாட்டில் இருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி, உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
தமிழகத்திலிருந்து பட்டாசு ஏற்றிக் கொண்டு அயோத்தி நோக்கி, லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி, நேற்று அதிகாலை உன்னாவ்-புர்வா சாலையில் பூர்வா கோட்வாலியின் கார்கி கேடா கிராம பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில், லாரியில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதற ஆரம்பித்தன. தீப்பிடித்த சிறிது நேரத்திலேயே லாரி முழுவதும் பற்றி எரிந்தது. தொடர்ந்து பல மணி நேரமாக பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருந்ததால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது.
இதனால் அந்த நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த அங்குள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இருப்பினும் இந்த விபத்தில் அதிர்ஷ்வசமாக யாரும் காயமடையவில்லை.
அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக, பட்டாசு ஏற்றப்பட்ட லாரி அயோத்திக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பட்டாசு லாரி தீப்பிடித்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.jpg)
.jpg)