சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து கடும் பாதிப்பு: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைவதுடன் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆதலால் இந்த கால்நடைகளை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரணாம்பட்டு நெடுஞ்சாலை மற்றும் வி. கோட்டா சாலையில் கால்நடைகள் அதிக அளவில் சாலையில் நடுவில் படுத்து உறங்கும் நிலை நிலவுகின்றது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.குறிப்பாக இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்களால் சாலையின் குறுக்கே செல்லும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இன்றி மருத்துவமனைக்குச் செல்லும் சூழலும் உருவாகி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் குறித்து பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகம் கால்நடைகளின் உரிமையாளர்களுக்குஅபராதமோ அல்லது கால்நடைகளை பிடித்து கோ சாலையில் அடைக்கவோ வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இனிவரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் நகராட்சி நிர்வாகம் கால்நடைகள் சாலைகளில் திரிவது குறித்து உடனடி போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனி நகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.