தென்காசியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்ற கட்டிடம் கட்டிட அரசாணை
அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம்சிவபத்மநாதன் கோரிக்கை
தென்காசியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்ற கட்டிடம் கட்டிட அரசாணை வெளியிட வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனிடம், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோhரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதே போல்தென்காசி மாவட்டத்திற்கு மாவட்ட நீதிமன்றம் அறிவிக்கப்பட்டு, கடந்த 2 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. மேலும் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்ட முதன்மை நீதிமன்றம் அமைய கடந்த 7-12-22 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறக்கப்பட்டு, நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடையநல்லூர் வட்டம், ஆய்க்குடி கிராமம் சர்வே எண் 84 ல் 5.54 ஹெக்டேர் மற்றும் சர்வே எண் 97 -1 ல் 01.95.0 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சர்வே எண் 84ல் தென்காசி மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிடமும், சர்வே எண் 97ல் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு மற்றும் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகம் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் குடியிருப்புகள் அமைக்கவும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை பிறப்பிப்பதில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, நீதிமன்றம் அமையும் இடத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் அமைவதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டுகிறேன். இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அப்போது, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால்,மாவட்ட ஆதிராவிடர் அணி துணை அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான தர்மராஜ்,மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், வீரா சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது யாகூப், வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன், முகமது ஈசாக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.