இஸ்ரேல் அரசை கண்டித்து CPI M ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலை நடவடிக்கையை கண்டித்து கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனில் நிகழ்த்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்தாண்டு அக்டோபர் முதல் இனப் படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் 36 ஆயிரம் பேருக்கு மேல் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த 26-ம் தேதியன்று எல்லை நகரமான ரஃபாவில் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் அரசைக் கண்டித்தும் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் ஞாயிறன்று நடத்தப்பட்டது.கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீன பகுதிகளில் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்கவும், இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும், மத்திய மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்தவும், சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை ஐநா சபை மூலம் உருவாக்கிடவும் வலியுறுத்தப்பட்டது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.