வேலூர்: 6 மாதங்களாக சாலை போடாததை கண்டித்து காட்பாடி விடிகே நகர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!
8/27/2024
0
காட்பாடி வள்ளிமலை ரோடு விடிகே நகரை சேர்ந்தவர்கள் கடந்த 6 மாதங்களாக ஜல்லி கற்கள் பரப்பிய சாலையில் புழங்கி வந்தனர். இதையடுத்து வேலூர் மாநகராட்சியின் 3வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமாரிடம் பலமுறை சொல்லியும் இந்த சாலையை செப்பனிட்டு தராமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டார். இதையடுத்து பொறுத்து பொறுத்து பார்த்த பொதுமக்கள் பொங்கி எழுந்தனர். இதன் விளைவு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காட்பாடியில் இருந்து சேர்க்காடு செல்லும் சாலையில் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன் இந்த 3வது வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் இந்த சாலையை போட்டு தர காண்ட்ராக்ட் எடுத்த ஒப்பந்ததாரர் லோகநாதன் ஆகியோர் நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் வரும் திங்கள்கிழமை இந்த சாலையை போட்டு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சில மணி நேரங்கள் கழித்து காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் காட்பாடி விடிகே நகர் இளைஞர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு இதற்கு தலைமை யார்? மற்றும் 10 பேர் பெயர்களை சொல்லுமாறும், நான் வழக்கு பதிவு செய்ய உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். 10 பேர் மீது போடுவதைவிட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் என்றார். அனைவரின் பெயரிலும் வழக்கு பதிவு செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார் இளைஞர். இதனால் அதிர்ந்து போன உதவி ஆய்வாளர் மணிகண்டன் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். நீங்கள் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தால் நூறு பேர் காவல் நிலையத்தில் முற்றுகையிடுவார்கள் என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இதையடுத்து செய்வதறியாது திகைத்துப் போன அந்த காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் அந்த வழக்கு போடும் எண்ணத்தையே அடியோடு விட்டுவிட்டு கப்சிப் என்று ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
