கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் (ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள்) தொடர்பான பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்ததாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு 2024-25 ஆம் ஆண்டிற்கு சிறுதானியங்கள் 52,517 எக்டர் பரப்பில் சாகுபடி செய்து 1,63,000 மெட்ரிக் டன்கள் மொத்த உற்பத்தி செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது. மேலும், சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகப்படுத்த ரூ.4 கோடி நிதி செலவில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் குறிப்பாக விவசாயிகளின் வயல்களில் இராகி, சோளம், கம்பு, சாமை ஆகிய பயிர்களில் தொகுப்பு செயல்விளக்கங்கள் அமைத்தல், 50 சதவீத மானியத்தில் சிறுதானிய விதைகள் விநியோகம் செய்தல், விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு விதை உற்பத்தி மானியம் வழங்குதல், உயிர் உரம், நுண்ணூட்ட உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகிய இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், இத்திட்டம் தொடர்பாக அனைத்து விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம், பர்கூர், வேப்பனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம் மற்றும் தளி வட்டாரங்களில் உள்ள கிராமங்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் (ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள்) தொடர்பான பிரச்சார வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.ராஜமோகன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் திருமதி.டி.கலா, விவசாயிகள் சங்க தலைவர் திரு.ராமகவுண்டர் மற்றும் வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
