கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், உரிகம் உள்வட்டம், மாடக்கல் மலை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தளி சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக எடுத்துரைத்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி அத்திட்டங்கள் மூலம் பொதுமக்கள் எவ்வாறு பயனடைய முடியும் என்பதை நேரடியாக துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளிக்கும் வகையில் இம்மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட பல்வேறு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இம்முகாம்களில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
மேலும், பெண் மற்றும் ஆண் குழந்தையாக இருந்தாலும் முதலில் அவர்களை உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் உயர்கல்வி படித்தால் தான் நல்ல வேலைக்கு செல்ல முடியும், நல்ல முடிவை எடுக்க முடியும், ஒரு குடும்பம், ஒரு சமுதாயம் மேலே உயர்ந்து வர முடியும். ஆகையால் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில பெற்றோர்கள் அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு 1 முதல் 5 -ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், காலை உணவு வழங்கப்படுகிறது. மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவும், முட்டை, விலையில்லா சீருடை, மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. உயர்கல்வி பயில செல்லும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை, இலவச விடுதி வசதிகள் போன்ற வசதிகளை வழங்கி வருகிறது.மேலும், கடந்த மாதம் அஞ்செட்டி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் களஆய்வு மேற்கொள்ளும்போது இப்பகுதி மக்கள் ஐடிஐ கல்லூரி அமைத்து தர கோரிக்கை வைத்தனர். இப்பகுதியில் ஐடிஐ கல்லூரி அமைக்க கருத்துரு தயார் செய்து அரசுக்கு அனுப்பி தற்போது பரிசீலனையில் உள்ளது.
நமது மாவட்டத்தில் 18 வயது நிறைவடைவதற்கு முன்பே பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இளம்வயது திருமணத்தால் அவர்கள் கல்வி கற்க முடிவதில்லை. 18 வயதிற்கு முன்பாக குழந்தை பிறப்பதால் குழந்தையின் எடை, உயரம் குறைவாக என பல்வேறு குறைபாடுகளோடு பிறக்கிறது. ஒரு சமுதாயம் முன்னேற அங்கே உள்ள குழந்தைகள் படித்தால் தான் உயர முடியும். ஆகையால் கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அஞ்செட்டி வட்டத்தில் வீடு கட்ட ஆணைகள் பெற்ற பயனாளிகள் உடனடியாக வீடு கட்டுமான பணிகளை துவங்க வேண்டும். மேலும் கட்டுமான பணிகள் குறித்த ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து வீடு கட்டுமான பணிகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், வருவாய்த்துறை சார்பாக 37 பயனாளிகளுக்கு ரூ.18 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளும், 6 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளும், 2 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகளும், மாவட்ட வழங்கல் துறை சார்பாக 33 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 48 ஆயிரத்து 500 மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பாக 6 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 12 ஆயிரத்து 500 மதிப்பில் திருமண உதவி தொகை மற்றும் இயற்கை மரண உதவித் தொகையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக, 6 பயனாளிகளுக்கு ரூ.37 ஆயிரத்து 250 மதிப்பில் தையல் இயந்திரங்கள், இலவச சலவைப்பெட்டிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பாக 4 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சத்து 27 ஆயிரத்து 354 மதிப்பில் தளவாடப்பொருட்களும், வேளாண்மைத்துறை சார்பாக 7 பயனாளிகளுக்கு ரூ.26,040 மதிப்பில் வேளாண் உபகரணங்கள் என மொத்தம் 105 பயனாளிகளுக்கு ரூ.25 இலட்சத்து 3 ஆயிரத்து 644 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய துறைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.சி.பன்னீர்செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.கீதா ராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர்திரு.டி.ரமேஷ்குமார்மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருமதி.பத்மலதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி,ஜெயந்தி, அஞ்செட்டி வட்டாட்சியர் திரு.மாதேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சீனிவாசமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.முனிராஜ், திருமதி.சைலஜா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.விஜயகுமார், ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி.மலரம்மா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

