பெரணமல்லூர் அருகே சிவன் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் மிகவும் பிரசித்தி திருமணி சேறையுடையார் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மாதம்தோறும் பவுர்ணமி கிரிவலம் மற்றும் பிரதோஷ விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஐப்பசி மாத பிரதோஷம் முன்னிட்டு மாலை 5மணிக்குமேல் மூலவருக்கு முன் அமைந்திருக்கும் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதன் பின்னர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் நன்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோயில் வளாகத்தில் உலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பெரணமல்லூர் பேரூராட்சியில் அமைந்த திருக்கரைஈசுவரர், பெரியஏரி பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் நடந்த விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
