கோவை, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ளது. இங்கு கோவை மாநகர பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்து அவசர போலீஸ் என் 100 பயன்படுத்தி பொதுமக்கள் புகார் அளித்தால் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீசார் பணியில் இருந்தார்கள். அப்போது நேற்று இரவு 9.15 மணிக்கு காவல் கட்டுப்பாட்டறைக்கு செல்போனில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.அதில் ஒரு ஆண் பேசினார். அப்போது அவர் கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி மேயர் பங்களாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்றும் அது இரவு 10 மணிக்கு வெடிக்கும் என்றும் கூறினார்.அதன் பிறகு உடனே செல்போனை அணைத்து விட்டார்.
இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மேயர் பங்களா உள்ள பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து. காவல் துறையினர் உஷார் படுத்தினர். உடனே சட்டம் - ஒழுங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மேயர் பங்களாவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.அங்கு வெடிகுண்டு கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சோதனைக்கு பிறகு அந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் யார் ? என கவுண்டம்பாளையம காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் நம்பர் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்திய போது அவரது பெயர் ஆனந்த் (வயது 40), கவுண்டம்பாளையம் அருகே உள்ள பிரபு நகர் தக்காளி மார்க்கெட் பகுதியைச்சேர்ந்தவர்எனதெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று ஆனந்தை மடக்கி காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.அப்போது ஆனந்த் தனது ஊர் திருப்பூர் என்றும், கோவை மாநகராட்சியில் ப்ளம்பராக தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருவதாகவும் கூறினார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடும்ப பிரச்சனையில் தனது மனைவி குழந்தையுடன் பிரிந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், அவர்களை தன்னுடன் அனுப்புவதற்கு அவரது மனைவியின் குடும்பத்தினர் மறுத்து வருவதாகவும் கூறினார்.இதுகுறித்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு போலீஸ் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்ததாகவும், ஆனால் அந்த புகார் குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியில் மேயர் பங்களாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் எடுத்ததாகவும் கூறினார்.இதைத்தொடர்ந்து போலீசார் ஆனந்தை கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.