விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான கோவில். இந்த கோவில் அந்த ஊர் மக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முயன்றனர். அப்போது மற்றொரு பிரிவினை சேர்ந்தவர்கள் அவர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்தனர்.
இந்த சம்பவம் பூதாகரமாகிய நிலையில் நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது. அதுவரை கோயிலும் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இரு தரப்பினரும் சுமூகமாக சாமி தரிசனம் செய்யும் வகையில் வருவாய்த்துறை சார்பிலும், போலீசார் சார்பிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்புடன் இன்று பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.இன்று காலை 5.30 மணிக்கு திரெளபதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கோவிலில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் பொருத்தப்பட்டு இருந்தது.
300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் இன்று தான் நாங்கள் முதல் முறையாக உள்ளே சென்று சாமி தரிசனம் செய்திருப்பதாக பட்டியலினயின மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த கோயில் நிர்வாகிகள் கூறுகையில், வெள்ளிகிழமை மட்டும் நாங்கள் சாமி தரிசனம் செய்து வருவதாகவும் இந்த கோயிலில் ஒருகால பூஜை மட்டுமே நடக்கும் என்றும், அதுவும் காலையில் மட்டுமே என்றும் கூறினர்.அப்போது அங்கிருந்த ஒருவர் அங்கு வந்து, பட்டியலின மக்களுக்காக இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தீர்கள்.. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மட்டும் ஏன் எங்களுக்கு வழங்க மறுக்கிறீர்கள் என்று கூறி கலாட்டாவில் ஈடுபட்டார். எனினும் அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.