கும்பகோணம்:கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் முட்டுக்கட்டை போட்டால் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் அமைச்சர் கோவி செழியன்!!!

sen reporter
0

கும்பகோணத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுவதாக உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன்தெரிவித்துள்ளார். மருத்துவர் அமுதகுமார் எழுதிய 'நல்ல உணவு நலமான வாழ்வு' என்ற புத்தகத்தை, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தனது இல்லத்தில் நேற்று (ஜூலை 21) வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கோவி செழியன் பேசுகையில், “நலமான வாழ்வுக்கு அனைவரும் இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது”என்றார். தொடர்ந்து பேசிய அவர், “கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும், தற்போது வரை ஆளுநர் ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல்காலம்தாழ்த்துகிறார். இதற்கான காரணம் குறித்து கேட்பதற்காக, உயர்கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் நானும், மற்ற அதிகாரிகளும் பலமுறை முயன்றும் ஆளுநர் மாளிகையில் இருந்து உரிய பதில் ஏதும் கிடைக்கவில்லை. கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் முட்டுக்கட்டை போட நினைக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு மேலும் ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தினால், மீண்டும் அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடுவோம்.

ஆளுநருக்கு தமிழ்நாடு, தமிழ், கருணாநிதி என்று சொன்னாலே கசக்கிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும்” என தெரிவித்தார்.முன்னதாக, கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதில், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் மேம்பாட்டிற்காக கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், கருணாநிதி பெயரிலான பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரும் இருப்பார் எனவும், கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 17 கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top