சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையம் வழக்கம் போல் நேற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் விமான நிலைய மேலாளர் அறைக்கு வெளிநாட்டு முகவரியில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதனை ஆய்வு செய்த போது, 'விமான நிலைய கழிவறை, விஐபிகள் ஓய்வு எடுக்கும் அறைகளில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அவை வெடித்து சிதறும் முன் தப்பித்துக் கொள்ளுங்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சிடைந்த அதிகாரிகள், இது குறித்து விமான நிலைய இயக்குநருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான நிலைய போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் அவசரகால பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
தொடர்ந்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக சோதனையின் ஈடுபட்டனர். குறிப்பாக மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்ட விஐபி ஓய்வு எடுக்கும் அறைகள், கழிவறைகள், விமானங்கள் நிறுத்தும் இடம், பயணிகள் அமரும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன
விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால், இது வழக்கமாக வரும் புரளி என்பது தெரிய வந்துள்ளது. இந்த சோதனையில் பயணிகளின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்ததால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய துபாய், சிங்கப்பூர், ஹாங்காங், இலங்கை, ஃபிராங்பார்ட், தோஹா, சார்ஜா உள்ளிட்ட சர்வதேச விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக, விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பப்பட்ட ஐபி முகவரியை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
