நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த வெல்லிங்டன் ராணுவ மையம் பகுதியில் நாள்தோறும் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் நடைப்பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த பகுதியில் இன்று திடீரென 30க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததுடன், அங்குள்ள பசுமையான புல்வெளிகளில் நீண்ட நேரம் மேய்ச்சலில் ஈடுபட்டன.
இதனால் அந்த பகுதியில் ராணுவ குடியிருப்பில் வசிப்பவர்கள் மிகுந்த பயத்துடன் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டனர். மேலும் அந்த காட்டெருமைகள் சாலையை மறித்து நின்றதால், அங்கு தற்காலிகமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று காட்டெருமைகளை அங்கிருந்து விரட்டினர். பின்னர் பொதுமக்களிடம் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், வன விலங்குகள் ஏன் இதுபோன்று ஊர்களுக்குள் வருகின்றன என்பது குறித்தும் எடுத்துரைத்தனர். அப்போது, “பொதுவாகவே மழைக்காலங்களில் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் காட்டெருமைகள் ஒன்று திரண்டு கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன.எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். விலங்குகளை அச்சுறுத்தும் விதமான செயல்களில் ஈடுபடக்கூடாது. அதேசமயம் அவற்றின் அருகிலும் செல்லக்கூடாது. குறிப்பாக, செல்போனில் செல்ஃபி எடுக்கும் விஷம செயல்களில் ஈடுபட வேண்டாம்.
பொதுவாகவே, மற்ற விலங்குகளைப் போன்று காட்டெருமைகள் மனிதர்களை தாக்குவதில்லை. அதேசமயம் உணவு கிடைக்கவில்லை என்றால் அவற்றிற்கு கோபம் வரலாம். எனவே இங்குள்ள மக்கள் குப்பைகளை திறந்த வெளியில் போடாமல், உணவுப் பொருட்களை வெளியே வைக்காமல் இருப்பது நல்லது என்று அறிவுரை வழங்கினர்.இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், இதுவரை இவ்வளவு காட்டெருமைகள் ஒன்றாக இங்கு வந்ததில்லை. ஒரே நேரத்தில் இவ்வளவு எருமைகள் ஒன்றாக வந்ததை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. அவை இங்குள்ள புல்வெளிகளில் மேய்ந்ததோடு மட்டுமல்லாமல் இங்குள்ள மரக்கிளைகளையும் உடைத்து சேதப்படுத்தியது" என்றனர்.
