*கடந்து வந்த பாதை* தமிழ்நாட்டின் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களை கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை அரசு அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் உறுப்பினர்களாக ராம சீனுவாசன், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், முனைவர் அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், துளசிதாசன், டி.எம்.கிருஷ்ணா, பாலு, ப்ரீடா ஞானராணி, பேராசிரியர் பழனி, முனைவர் ஏ. கருப்பசாமி ஆகியோர் இருந்தனர்.இந்த குழுவினர் பல்வேறு தரப்புகளிடம் நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்து 600 பக்கம் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 2024 ஜூலை 1 ஆம் தேதி சமர்ப்பித்தனர். அந்த அறிக்கை ஆங்கிலத்தில் 550 பக்கங்களும், தமிழில் 600 பக்கங்களும் இருந்தன.
*குழுவின் பரிந்துரைகள்*
மேலும் குழு சார்பில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டன. அதன்படிகல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாக கற்பிப்பது அவசியமாகும். தொடக்க நிலை முதல் பல்கலைக்கழகம் வரை கல்வியை தமிழில் கற்பது கல்வி உரிமையாகும்.தமிழ் பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட வேண்டும்.தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரிகளுக்குப் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.ஒரு குழந்தைக்கு ஜூலை 31ஆம் தேதி அன்று 5 வயது பூர்த்தியானால், அவர் முதல் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
பள்ளிகளில், தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்ற (5+3+2+2) கல்வி முறையை பின்பற்ற வேண்டும்.
கலாச்சார, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றம், சமூக சமத்துவம், அன்றாட வாழ்க்கை, அரசியலமைப்பு மதிப்புகளை பற்றியும் மாணவர்களிடம் எடுத்து செல்லும் வகையில் பாடத் திட்டத்தை உருவாக்க வேண்டும்எனவும்பரிந்துரைக்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பறையில் தொழில்நுட்பங்களைக் கட்டாயம் அனுமதிக்க வேண்டும்.
மாணவர்களின் வளர்ச்சி, அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளின் படி குழுவாக கற்கவும் வழிவகை செய்ய வேண்டும்.மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் பொது வாரிய தேர்வுகளை எழுதும் வரை பள்ளி அளவில் மட்டுமே தேர்வுகள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
பள்ளியில் விழிப்புணர்வு
போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு மனநல ஆலோசகர், ஒரு சுகாதார அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோர் தகுந்த வழிகாட்டுதல்களுடன் தனிக் குழு அமைக்கலாம்.
இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
உயர்கல்வியில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு முறை இருக்கக்கூடாது. அதனை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும்.
கல்லூரிகளில் சேர பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. 11ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளதை போல மாணவர்கள் உயர் கல்வி பயில்கின்ற போதே படிப்பிலிருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே படிப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்றக் கூடாது.
மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தால் அதனை முடிக்கும் வரையில் தொடர்ந்து படிக்க வேண்டும். இடையில் வெளியேற அனுமதிக்கக் கூடாது.
சுகாதாரம் முக்கியம்
மாநிலத்தில் குழந்தைகள் மேம்பாட்டு மையங்களை ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டு வருவது முறையான நிர்வாகத்திற்கு அவசியம். அனைத்து தாய் - குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் ECCD (Early Childhood Care and Development) நிறுவனங்களையும் ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வர கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் பரிந்துரைக்கிறது.
தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் நர்சரிப் பள்ளிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும்.கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
*விளையாட்டு முக்கியம்*மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பயிற்சி முகாம்கள் மற்றும் விளையாட்டு, தடகள நிகழ்வுகளில் கலந்துகொள்ள திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி உறுதி செய்யப்பட வேண்டும்.உயர்கல்வியில் (open book assessment) தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம்.நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்விநிலையங்கள்விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.