சென்னை:கிராமப்புறங்களில் சிறு குறு கடைகளுக்கு உரிமம் பெறத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு!!!
8/01/2025
0
சென்னை:கிராமப்பகுதிகளில் உள்ள சிறு குறு கடைகளுக்கு உரிமம் பெற தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு புதிய விதிகளை அரசாணையாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிறப்பித்திருந்தது. அந்த அரசாணையில், “சிறு - குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்குத் தனித் தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். ஊரக, உள்ளாட்சிகளில் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகள் உள்ளன.ஆகையால், ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டுமென்றால், ஊராட்சி ஒன்றியக் குழுவின் அனுமதி மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையரின் அனுமதி பெற வேண்டும். மேலும், அந்தந்த ஊராட்சியில் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும்.அந்த வகையில், யாரேனும் ஒரு கிராம ஊராட்சி எல்லைக்குள் தொழில் தொடங்க விரும்பினால் கிராம ஊராட்சித் தலைவர் உரிமம் பெற வேண்டும். மேலும், ஊராட்சி ஒன்றித்தின் எல்லைக்குள் தொழில் தொடங்க விரும்பினால், ஊராட்சி ஒன்றியக் குழுவின் அனுமதி மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையரின் அனுமதி பெற வேண்டும். மேலும், உரிமக் கட்டணம் அந்தந்த ஊராட்சியில் செலுத்தப்பட வேண்டும்”எனக்குறிப்பிட்டிருந்தது. இந்த அரசாணைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. மேலும் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பினர் முதலமைச்சருக்குக் கோரிக்கை மனுவையும் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சிறு வணிகர்கள் உரிமம் பெறும்நடைமுறைஎளிமைப்படுத்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார். மேலும் துறை அலுவலர்கள் மற்றும் வணிக சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை நிர்ணயம் செய்து பரிந்துரைகள் பரிசீலனை செய்யப்படும், புதிய சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது கிராமப்புறபஞ்சாயத்துகளில் சிறு குறு கடைகளுக்கு உரிமம் பெறத் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.