சிவகாசி:பதினான்கு ஆண்டுகளில் 379 உயிரிழப்புகள் கண்ணீர் வரவழைக்கும் 'பட்டாசு' நகரின் பரிதாபம்!!!
9/17/2025
0
பட்டாசு நகரம் என்று அழைக்கப்படும் சிவகாசியில் கடந்த 2011 முதல் 2024 வரையிலான கால கட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துகளில் 379 பேர் உயிரிழந்துள்ளனர்.பட்டாசு ஆலையில் வேலை பார்த்துட்டு இருந்தப்போ டமால்னு ஒரு சவுண்ட். உடனே நானும் எங்க அப்பாவும் உயிர கையில பிடிச்சுக்கிட்டு அங்கிருந்து ஓடினோம். அப்போ வேலியில ஏறி குதிக்கும் போது கால்ல கிழிச்சு ரத்தம் வந்துச்சு... இருந்தாலும் உயிர் பிழைச்சா போதும்னு அங்கிருந்து ஓடிட்டேன். ஆனா, 8 மாசம் புள்ளத்தாச்சியா இருந்த என் பக்கத்து வீட்டு அக்கா, குழந்தைய பெத்து கொஞ்சனும்னு எவ்ளோ ஆசையா இருந்திருக்கும். ஆனால், வயித்துல குழந்தையோடு அவுங்க கருகுனத என் கண்ணால பாத்தேன்" என 2021 பிப்ரவரி 12 ஆம் தேதி கண் முன்னே அந்த கொடூர சம்பவத்தை கண்ணீருடன் விவரித்தார் சூசை ரத்தினம்.தீபாவளி, திருவிழாக்கள், திருமணம் போன்ற கொண்டாட்டங்கள், பட்டாசு இன்றி நிறைவு பெறுவதில்லை. வானத்தில் இருந்து வர்ணஜாலத்துடன் வாழ்த்து சொல்லும் அளவிற்கு, பட்டாசுகளின் நவீன ரகங்கள் சிவகாசியை 'இந்தியாவின் குட்டி ஜப்பானாக' மாற்றியுள்ளன. ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் பிரதான தொழிலாக, சிவகாசி பட்டாசு விளங்குகிறது.பட்டாசு என்றாலே மனதில் பண்டிகை, மகிழ்ச்சி, கொண்டாட்டம் போன்ற எண்ணங்கள் மட்டுமே தோன்றும். ஆனால், இதன் மறுபக்கம் ரத்தம் தேய்ந்தவையாகவே உள்ளன. சிவகாசிக்கு பட்டாசுத் தொழில் வரமாய் வாய்த்தாலும், சில சமயம் அதுவே சாபமாக மாறி உயிருக்கும், வாழ்வுக்கும் உலை வைக்கிறதுஎன்பதேஉண்மை.அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, சிறியது, பெரிது என தமிழ்நாட்டில் மொத்தம் 1,570 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,101 உரிமம் பெற்ற ஆலைகள் மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில், விற்பனையாகும் பட்டாசுகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவை சிவகாசியில் தயாரிக்கப்படுபவை. இந்தத் தொழிலில் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுத் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை நாக்பூரில் உள்ள பெசோ (PESO - Petroleum & Explosives Safety Organization) என்னும் மத்திய அரசின் அமைப்பு கண்காணித்து வருகிறது.
