காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கடல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தம். இவரது கணவர் இறந்த நிலையில், தனது மகளுடன் மந்தைவெளி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 50 வருடமாக குடிசை போட்டு வசித்து வந்தார்.இந்த நிலையில், அமிர்தம் வசித்து வந்த குடிசை வீடு முழுவதுமாக சேதமடைந்ததால், ஹாலோ பிளாக் கல் வைத்து சிறிய வீடு கட்டும் பணியை அண்மையில் தொடங்கினர். தற்போது வீட்டின் வேலை பாதியளவு முடிந்து, வாசல் கால் நடும் பணி முடிந்துள்ளது. இந்த நிலையில், அமிர்தம் கட்டிய புது வீட்டை, அதிகாரிகள், போலீஸ் உதவியுடன் கனரக இயந்திரத்தை வைத்து இடித்து தரைமட்டமாக்கினர்.
இதனை தடுக்க வந்த அமிர்தம் மற்றும் அவரது மகள் கல்பனாவை அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. கைது செய்து வேலூர் சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், வீடின்றி கடந்த சில நாட்களாக அமிர்தம் மற்றும் அவரது மகள் கல்பனா சாலையில் படுத்து உறங்கி வருகின்றனர்.இந்த நிலையில், இதனை கண்ட அப்பகுதி மக்கள் அமிர்தம் மற்றும் கல்பனாவுக்கு ஆதரவாக இன்று (செப்.25) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமிர்தத்தின் வீட்டை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கல்பனா கூறுகையில், “நாங்கள் 50 வருடமாக அந்த பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் இருந்த ஓலை வீடு இடிந்து விழுந்ததால், தற்போது வீடு கட்டும் பணியை தொடங்கினோம். ஆனால், அதிகாரிகள் எங்கள் வீட்டை இடித்துள்ளனர். அதே பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை அடித்து விரட்டினர். நாங்கள் என்ன தப்பு செய்தோம், ஏன் வேலூர் சிறைக்கு செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
