முன்னதாக, கீரனூர் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சர், ரூ.201 கோடியில் 103 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.223 கோடியில் 577 முடிவற்ற திட்ட பணிகளை தொடங்கியும் வைத்தார்.தொடர்ந்து பேசிய அவர், குகை கோயில்கள், கல்வெட்டுகள், தொல்லியல் சின்னங்கள், சோழர், பாண்டியர், முத்தரையர் தொண்டைமான்களால் ஆட்சி செய்யப்பட்ட வரலாற்று புகழ்பெற்ற புதுக்கோட்டை மண்ணில் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, புதுக்கோட்டைக்கு வழங்கப்பட்ட திட்டங்களை பார்த்தால் பிரமிப்பாக உள்ளது என்ற அவர் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.அறந்தாங்கி வட்டத்தில் இருக்கக் கூடிய வீரகொண்டான் ஏரி, செங்கலனி ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.கீரமங்கலம் விவசாயிகள் நலன் கருதி அவர்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைத்திட ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளானூர் ஊராட்சி, திருவநல்லூர் ஊராட்சி மற்றும் வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடி மதிப்பில் உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வண்ணம் நியோ டைட்டல் பார்க்அமைக்கப்படும்.கந்தர்வகோட்டை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்.அதே போன்று பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிமாநிலம் மட்டுமின்றி, கனடாவிலும் நாம் கொண்டு வந்த ‘காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதான் நமது அரசுக்கு கிடைத்த வெற்றி. இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்குவதாக பாஜக குற்றம் சாட்டியது. அந்த பாஜக ஆளுகின்ற மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழகத்தைபின்பற்றிதிட்டங்கள்நிறைவேற்றுகின்றனர். எதிர்க்கட்சி என்றால் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்று அவசியமில்ல. ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களையும், மக்கள் பயன் பெறக்கூடிய திட்டங்களையும் கொச்சைப்படுத்தி பேசுகின்றனர். என்ன செய்வது? அவர்களது குணம் அப்படி. அவர்களுக்கு தெரிந்த பண்பாடு அவ்வளவு தான். என்னை பொறுத்த வரை போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், நம் பணி மக்கள் பணி. எதிர்க்கட்சிகள் ஆயிரம் ரூபாய் வேண்டாம் என கொச்சைப்படுத்தினாலும் மக்கள் அவர்களை மதிப்பதில்லை. பொதுமக்கள் நமது திட்டங்களை ஆதரித்துப் பேசி வருகின்றனர் என்றார்.
