திருநெல்வேலி:நெல்லையில் கனமழை லட்சக்கணக்கான வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் வேதனை!!!

sen reporter
0

 

சேரன்மகாதேவி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், குலை தள்ளி பருவமடைய துவங்கிய ஒன்றரை லட்சம் வாழை மரங்கள் பாதியில் முறிந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பரவலாக பெய்து வருகிறது. இதில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இந்த நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சூறாவளி காற்றுடன் நேற்று கனமழை பெய்தது. இதில், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் வாழை மரங்கள் பாதியில் முறிந்து விழுந்தன.சேரன்மகாதேவி அருகே உள்ள கிராமங்களான மேலச்சேவல், பிரான்சேரி, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 780 ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில், பல இடங்களில் வாழை குலை தள்ளி பருவமடைய துவங்கியுள்ளது. இந்த நிலையில், சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக 3 கிராமங்களில் நடப்பட்டிருந்த ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், கனமழையால் லட்சக்கணக்கான மரங்கள் பாதியில் சாய்ந்ததால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, முறையாக கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. குறிப்பாக மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில், மாஞ்சோலை மலையில் இருந்து பாய்ந்து ஓடும் தண்ணீர் மணிமுத்தாறு அருவியை வந்தடைகிறது. இதனால், மணிமுத்தாறு அருவியில் இன்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top