காஞ்சிபுரம்:மழை வெள்ளத்தில் மிதக்கும் பரந்தூர் விமான நிலையம் அமையும் பகுதி! ஓடு தளத்தில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்!!!
11/07/2025
0
காஞ்சிபுரம் குணகரம்பாக்கம் பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமத்தினர் பெரும்பாலும் இந்த தரைபாலத்தை பயன்படுத்தி தான் ஆற்றை கடக்கின்றனர்.பரந்தூர் விமான நிலையம் அமையும் பகுதி வழியாக செல்லும் ஏகனாபுரம் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.பாலாற்றுப் படுகையில் இருந்து நிரம்பி வரும் தண்ணீர், வழியில் 60-க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பி விட்டு சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கம்பன் கால்வாய் மூலம் இறுதியாக செம்பரம்பாக்கம் ஏரியை வந்து சேருகிறது. இந்த நிலையில், வட மாவட்டங்களின் நீர் ஆதாரமாய் திகழும் கம்பன் கால்வாய் பகுதியில், தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த குணகரம்பாக்கம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. பாலாற்றுப் படுகையில் இருந்து வரும் வெள்ளம், ஏகனாபுரம் ஏரியை நிரப்பி விட்டு குணகரம்பாக்கம் பகுதி வழியாக பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் ஆற்று பகுதிக்கு செல்கிறது.இந்த குணகரம்பாக்கம் பகுதியைச் சுற்றிலும் செல்லம்பட்டி, எளிமையான், கோட்டூர், இடையர்பாக்கம் என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும், குணகரம்பாக்கம் தரைப் பாலத்தை பயன்படுத்தி தான் ஆற்றை கடக்கின்றனர்.இந்த சூழலில் நேற்று மாலை மற்றும் இரவு பெய்த கனமழையால் குணகரம்பாக்கம் தரைப் பாலத்திற்கு மேல் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு நீரானது சீறி பாய்ந்து செல்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக் கடாய் காட்சியளிக்கிறது.அரசு அறிவித்துள்ள பரந்தூர் விமான நிலையம் வரைபடத்தில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதி விமான ஓடுதளம் அமைய உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது. இதையும் மறந்த அதே பகுதி மக்கள், தற்போதும் பாதுகாப்புக் காரணங்களை கருத்தில் கொள்ளாமல் தரைப் பாலத்தின் மேல் நடந்தும், இரு சக்கர வாகனத்திலும் மிகவும் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.எனவே, இந்த சாலையின் போக்குவரத்தை துண்டித்து மீண்டும் உயிரிழப்பு ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும், மழை காலங்களில் முற்றிலும் நீர் வழிந்தோடும் பகுதியாக இருக்கும் இந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கும் அரசின் நடவடிக்கையை கைவிடுமாறும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
