தருமபுரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் தருமபுரி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட டி.டி.வி. தினகரன் தருமபுரி சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக தருமபுரி மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரனை அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவரிடம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளதே என்று கேட்டனர். அவர் டி.டி.வி. தினகரன், அவர் உறுதியாக செல்ல மாட்டார். அவர் நிதானமாக முடிவு எடுக்கக் கூடியவர் என்றார்.தொடர்ந்து பேசிய டி.டி.வி.தினகரன், பொதுவாக நீதிபதிகள் மேல் அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார்கள் என்பது போன்ற ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் வரும் போது பதவி நீக்க நோட்டீஸ் வழங்குவார்கள். ஆனால் இது புதிதாக இருக்கிறது. நீதிபதி அவருக்கு உள்ள அதிகாரத்தில் அவர் ஒரு தீர்ப்பு சொல்கிறார். அதை ஏற்றுக் கொள்கிறோம் அல்லது இல்லை என்பது தமிழ்நாடு அரசுடைய நிலைப்பாடு. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினால் பாதிப்புகள் ஏற்படும் என மாநில அரசு நினைக்கின்றபட்சத்தில் மேல்முறையீடு செய்வது சாதாரணமாக நடக்க கூடியாது. ஆனால், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விவகாரத்தில் திமுகவினர் பதவி நீக்க நோட்டீஸ் வரை கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றால் இது வித்தியாசமாகத் தான் தெரிகிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக கொண்டு சென்றிருக்கிறார்கள். இருந்தாலும், மக்களவையில் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறினார்.மேலும் பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்தக் கூட்டணியில் இடம் பெறும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. கூட்டணிக்கு தலைமை தாங்குகின்ற கட்சிகள் எங்களுடன் பேசி வருவது உண்மை. இறுதி வடிவம் பெற்ற பின் நாங்கள் எந்த கூட்டணிக்கு செல்வோம் என்ற முடிவை உறுதியாக ஊடகங்களுக்கு தெரிவிப்போம் என்றார்.திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய டி.டி.வி. தினகரன், கடவுளின் பெயரால், கோயிலின் பெயரால், மதங்களின் பெயரால், ஜாதிகள் பெயரால் தமிழ்நாட்டில் எந்த ஒரு குழப்பத்தையும் எந்த ஒரு பதற்றத்தையும் எந்த ஒரு கட்சியோ அல்லது அமைப்போ செய்யக் கூடாது என்றார்.தவெக தலைவர் விஜயின் அரசியல் பயணம் எந்த அளவு வெற்றி பெறும் என்ற கேள்விக்கு பதில் அளித்த டி.டி.வி. தினகரன், இது மக்கள் தீர்மானிக்க வேண்டியது. இதற்காக நான் ஒரு ஏஜென்சியை நடத்தி எந்த கட்சி வெற்றி பெறும் என்று பதில் சொல்ல முடியாது. எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தவிர்த்து விட்டு எந்த ஒரு கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது - வெற்றி பெற முடியாது என்றார்.
