தஞ்சையில் இருந்து சிவகாசிக்கு பயணமாகும் காலண்டர் வடிவமைப்புகள்!!!
12/11/2025
0
குட்டி ஜப்பான் சிவகாசிக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ஒடிசா, பெங்காலி உள்ளிட்ட 14 மொழிகளில் தஞ்சையில் இருந்து காலண்டர் வடிவமைப்புகள் அனுப்பட்டு வருகின்றன.இந்திய அளவில் அதிகளவில் காலண்டர்கள் அச்சிடும் நகரங்களில் ஒன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி. இங்கு தான் நாட்காட்டி, மாத காலண்டர் என பல்வேறு நவீன வடிவமைப்புகளில் காலண்டர்கள் அச்சிடப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன.அங்குள்ள அச்சகங்களுக்கு தேவையான காலண்டர்களை வடிவமைப்பதற்கு, ஏராளமான கணினி கிராபிக்ஸ் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களில் தனிச்சிறப்புடன் காலண்டர்களை வடிவமைத்து கொடுத்து வருகிறார் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதம்பை ராமமூர்த்தி.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தஞ்சையில் அச்சகம் நடத்தி வரும் இவர், தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ஒடிசா, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் சமஸ்கிருத மொழிகள் மற்றும் தேவநாகரி மற்றும் கிரந்த எழுத்து வடிவத்தில் படிப்பது, எழுதுவது மற்றும் கணிப்பொறியில் அச்சிடும் ஆற்றல் பெற்றவர்.இவர் கடந்த 15 ஆண்டுகளாக சிவகாசியில் உள்ள முன்னணி அச்சகங்களுக்கு இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ஒடிசா, பெங்காலி, அசாமி ஆகிய 14 மொழிகளில் மாதாந்திர காலண்டர்களை வடிவமைத்து தருகிறார். இவருடைய சிறப்பான பிற மொழி வடிவமைப்பு காரணமாக, ஆண்டுதோறும் சிவகாசியிலிருந்து இந்திய மொழிகளில் காலண்டர்கள் வடிவமைப்புப் பணிகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டும் 14 இந்திய மொழிகளில் காலண்டர்களை வடிவமைத்து கொடுத்துள்ளார்.இது குறித்து அச்சக வடிவமைப்பாளர் ராமமூர்த்தி கூறுகையில், தஞ்சையில் 25 ஆண்டுகளாக அச்சகப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். எம்.ஏ.ஆங்கிலம் மொழி பெயர்ப்பியலுடன் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். இந்தி, சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் டிப்ளமோ படித்துள்ளேன். பல்வேறு நூல்களையும் அச்சிட்டுள்ளேன். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் புத்தகங்களை அச்சிட்டு வழங்கியுள்ளேன். தமிழக கல்வெட்டில் உள்ள கிரந்த எழுத்து வடிவத்தை நேரடியாக தட்டச்சு செய்து அச்சிட்டு வருகிறேன். கிரந்த எழுத்து வடிவத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் மற்றும் பழைய நூல்களை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.14 மொழிகளில் காலண்டர் வடிவமைத்து தந்தாலும் தாய்மொழி தமிழில் இதுவரை காலண்டர் அச்சிட வாய்ப்பு வந்ததில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில காலண்டர்களில் அச்சிடுவதில் அதிக எண்ணிக்கையில் கிராபிக்ஸ் நிபுணர்கள் உள்ளனர். இதனால், நான் பிற மொழி காலண்டர்களை மட்டும் வடிவமைத்து வருகிறேன் என்றார்.
