காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பொது விநியோக திட்டத்தின் 300-க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நியாய விலை கடைக்கும் விற்பனையாளர் மற்றும் எடையாளர் என இருவர் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கார்டு மூலம் பதிவு செய்து விநியோகம் செய்து வருகின்றனர்.
- காஞ்சிபுரம் மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 5 தாலுகாக்களிலும் நியாயவிலைக் கடைகளை தூய்மையாக வைத்திருத்தல்,
- நியாய விலை கடைக்கு வரும் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுதல்,
- நியாய விலைக் கடையினை குறித்த நேரத்தில் திறந்து பொது மக்களுக்கு முறையாக புகாரின்படி பொருட்களை விநியோகித்து செயல்படுத்துதல்,
- நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை சீரான பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளுதல்
- கடையின் விற்பனை முனைய கருவியினை சிறந்த முறையில் செயல்படுத்தி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குதல்
போன்ற மேற்கண்ட அனைத்து முறைகளையும் சரியாக செயல்படுத்தி ஈடுபடும் விற்பனையாளர் மற்றும் எடையாளருக்கு கூட்டுறவு துறை சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மண்டல மேலாளர் நுகர்பொருள் வாணிபக் கழகம் அவர்களின் பரிந்துரையின் பேரில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
புள்ளலூர் நியாயவிலை கடையில் பணிபுரியும் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் முதலிடத்தையும் , இரண்டாவதாக நைனார் தெருவில் இயங்கி வரும் நியாய விலை கடை விற்பனையாளர் ஷகிலாவும் தேர்வு செய்யப்பட்டனர்
இதேபோல் சிறந்த எடையாளராக கோட்ராம்பாளையம் நியாய விலை கடையில் பணிபுரியும் ராமுவும் பெரியார் நகர் பகுதியில் பணிபுரியும் ரமணியும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலிடத்தை பிடித்த நபருக்கு ரூபாய் 4000 இரண்டாம் இடம் பிடித்த நபருக்கு ரூபாய் 3000 , சிறந்த எடையாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபருக்கு 3000 இரண்டாம் நபருக்கு 2000 ரொக்கப் பரிசினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கூட்டத்தில் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ , பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் மணி , கண்காணிப்பாளர் சத்திய நாராயணன், கூட்டுறவுத்துறை அலுவலர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.