கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் பேரூர் திமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் அழகிய பாண்டிய புரத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் செயலாளர் அருள்தாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர் பிராங்கிளின், மாவட்ட துணைச் செயலாளர் கரோலின் ஆலிவர் தாஸ், பேரூர் அவை தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகர மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த காலத்தில் தீண்டாமைக்கு எதிராக வைகுண்டர், வள்ளலார், பெரியார் போராடினார்கள். அதை தொடர்ந்து அண்ணா, கலைஞரும் போராடினார்கள். அவர்கள் வழியில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தையும், மக்கள்
ஆட்சியையும் உருவாக்கினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வராகிறார். தமிழக முதல்வர் அமைச்சர்களை நியமிக்கிறார். அப்படியே நியமிக்கப்படும் அமைச்சர்களின் பதவியை ரத்து செய்யும் உரிமை ஆளுநருக்கு யார்? கொடுத்தது. தமிழகத்தில் உள்ள ஆளுநர் ஒன்றிய அரசின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார். கட்சியில் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு மாவட்ட பகுதியில் உள்ள மூத்த ஏழை உறுப்பினர்களை தேர்வு செய்து 1000 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட உள்ளது.
இந்த பொற்கிளியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார். அதற்கா நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் பூதப்பாண்டி பேரூர் செயலாளர் ஆலிவர் தாஸ், தொழில்நுட்பவியல் மாவட்ட அமைப்பாளர் சதீஷ், கன்னியாகுமரி தொகுதி அமைப்பாளர் அனிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.