மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விநாயகன். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குறித்து பேஸ்புக் நேரலையில் அவதூறாக பேசியது, கேரளாவில் கடும் சர்ச்சையை கிளப்பியது. இவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்பட ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜித் அமீர் பாவா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து விநாயகன் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து நடிகர் விநாயகன் பேஸ்புக்கில் இருந்து சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கம் செய்தார்.
இந்த நிலையில் விநாயகன் வசித்து வரும் கொச்சி கலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு மீது காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று முன்தினம் சரமாரியாக கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
மேலும், வீட்டுக் கதவையும் அவர்கள் அடித்து நொறுக்கினர். இது குறித்து அறிந்ததும் கொச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று தாக்குதல் நடத்திய அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.