கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலபெருவிளை பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன், செல்போன் டவர் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியதை அறிந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமான பணியையும் தடுத்து நிறுத்தினர். ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி மற்றும் பிரின்ஸ் எம்.எல்.ஏ, காங்கிரஸ் கவுன்சிலர் அருள்சபிதா மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்றனர். செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கையை கைவிட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனர்.
ஆனால், நீதிமன்ற அனுமதி உள்ளிட்டவை உள்ளதாக அதிகாரிகள் காவல்துறை தரப்பில் கூறினர். பணி நிறுத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் செல்போன் டவர் அமைக்க பணி தொடங்கப்பட இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து கவுன்சிலர் அருள் சபிதா தலைமையில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.
அந்தப் பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் தொடங்கினர். கஞ்சி காய்ச்சவும் நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி- நவீன் குமார் தலைமையில் போலீசார்
பெருமளவில் குருவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.