தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் படிப்புகளை நடத்துகின்ற வகையில் 13 அரசு பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கு பொதுவான பாடத்திட்டம் தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டும் என்று உயர்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழகங்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன.
ஒன்றிய அரசின் விதிகளையும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் உள்ள சட்டங்களையும், மீறும் வகையில் பாடத்திட்ட நடவடிக்கைகள் உள்ளதாக பேராசிரியர்களும் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாடு அரசின் ஒரே பாடத்திட்ட நடைமுறையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று கல்லூரிகளின் முன்பு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளின் முன்பு பேராசிரியர்கள் பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், பல்கலைக்கழக தன்னாட்சி உரிமையை பறிக்கின்ற தரமற்ற புது பாடத்திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். முட்டா உள்ளிட்ட அமைப்புகள் இதில் பங்கேற்றன.