செந்தூரில் உணவு பாதுகாப்பு துறை இரு நாட்களாக அதிரடி சோதனை;

sen reporter
0


 * உரிமமின்றி இயங்கிய மூன்று சமோசா தயாரிப்பு  நிறுவனங்களுக்கு லாக்! 

* உணவு பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!!

* நியமன அலுவலர் எச்சரிக்கை!



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியின் உத்திரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன்  தலைமையின் கீழ் சக்திமுருகன், காளிமுத்து மற்றும் ஜோதிபாஸூ ஆகிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவினையொட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள நடமாடும் தற்காலிக கடைகள் உள்ளிட்ட 60 உணவு வணிகர்களிடம் கடந்த இரண்டு நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


 அப்போது அதிக நிறமி சேர்க்கப்பட்ட 3 கிலோ பஞ்சுமிட்டாய், 2 கிலோ சிக்கன் உள்ளிட்ட 25 கிலோ சட்டத்திற்குப் புறம்பான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அந்த ஆய்வின் போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், திருச்செந்தூரில் மொத்தமாக சமோசா தயாரிக்கும் டி.பி.ரோட்டில் உள்ள மஹாராஜா, எல்.எஸ் ஜூவல்லர்ஸ் அருகே பச்சைப்பெருமாள் மற்றும் மணல்மேடு பகுதியில் முருகேசன் என்பவர்களுக்குச் சொந்தமான சமோசா தயாரிக்கும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததினாலும், மிகுந்த சுகாதாரக் குறைபாடுடன் இருந்ததினாலும் மூன்று நிறுவனங்களின் இயக்கமும் உடனடியாக நிறுத்தப்பட்டு, மூடப்பட்டன.  இதற்கான உத்தரவு நியமன அலுவலரால் வழங்கப்படும்.


உணவு வணிகர்களின் கவனத்திற்கு;


அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்திற்கு உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


 இதற்கான இணையத்தளம்: https://foscos.fssai.gov.in ஆகும். விண்ணப்பித்தவுடன் விரைவில் தங்களுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும். வணிகர்கள் ஏமாறாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இணையதள மையங்கள் தவிர, வேறு எவரிடமும், எந்நிறுவனத்திடமும் உரிமம் விண்ணப்பிக்க அணுகக் கூடாது. 


உணவு வணிகர்கள் திண்பண்டங்களை ஈக்கள் மொய்க்கும் வகையில் திறந்த நிலையில் விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும். மேலும், அறுக்கப்பட்ட பழங்கள்,வெள்ளரி போன்ற உணவுப் பொருட்களை அச்சிட்ட பேப்பரிலோ அல்லது அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக்கிலோ விநியோகம் செய்தால் அபராதம் விதிக்கப்படும். 


மேலும், பஞ்சுமிட்டாய் போன்றவற்றில் செயற்கை வண்ணம் சேர்க்காமல் தயாரிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகின்றார்கள்.


மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.


மேற்கண்ட தகவல்களை தூத்துக்குடி மாவட்டஉணவு பாதுகாப்புத் துறை, நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன், தெரிவித்துள்ளார்.

.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top