பல்வேறு திருட்டு தொடர்பான வழக்குகளில் கைதாகி புழல் சிறையிலிருந்த பெண் கைதி தப்பி ஓட்டம். தப்பி ஓடிய கைதி ஜெயந்தி பெங்களூரு விமான நிலையம் அருகில் கைது.
புழல் சிறையில் பணியில் இருந்த இரண்டு பெண் வார்டன்கள் பணியிடை நீக்கம்.
புழல் சிறையில் தப்பி ஓடிய பெண் கைதி பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புழல் பெண்கள் சிறையிலிருந்து தப்பியோடிய கைதி ஜெயந்தி பெங்களூருவில் சென்னை மாநகர சிறப்புத் தனிப்பிரிவு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா பெங்களூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி(32). இவர் சென்னை செம்மஞ்சேரியில் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் மீது செம்மஞ்சேரி, சூளைமேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி சூளைமேடு காவல் நிலைய காவல்துறையால் திருட்டு வழக்கு ஒன்றில் ஜெயந்தி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், புழல் சிறையில் சிறை கைதிகளுக்கு வழங்கும் வழக்கமான பணிக்குப் பிறகு கைதிகள் பதிவேட்டைச் சரிபார்த்த போது ஜெயந்தி மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிறை முழுவதும் அவரைத் தேடியும் அவர் காணாமல் போனதால் அவர் சிறையிலிருந்து தப்பிச் சென்று இருப்பதைக் காவலர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, சிறையிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் காவலர்கள் ஆய்வு செய்த போது, பார்வையாளர்கள் அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஜெயந்தி அதன் அருகே இருந்த நுழைவு வாயில் வழியாக வெளியே தப்பி ஓடியது தெரியவந்தது.
இந்த நிலையில், அவர் தப்பியோடிய போது கவனக்குறைவாக பணியிலிருந்த இரண்டு பெண் வார்டன்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயந்தி தப்பி ஓடியது குறித்து சிறைத்துறை காவலர்கள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புழல் சிறைத்துறை காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஜெயந்தியை தேடும் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஜெயந்தியின் புகைப்படத்தை அனுப்பி அவரை கண்டறிந்தால் தகவல் தெரிவிக்கும்படி தெரிவித்த நிலையில் இதனையடுத்து, புழல் காவல்துறை தப்பியோடிய ஜெயந்தியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
தப்பிய ஜெயந்தி பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பதால் பெங்களூரில் தலைமறைவாக இருக்கக்கூடும் என நினைத்து, சிறப்புத் தனிப்படை காவல்துறை பெங்களூரூவில் ஜெயந்தியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பெங்களூரு விமான நிலையம் அருகே கங்கேரி பகுதியில் புழல் சிறை அதிகாரி லிங்கசாமி தலைமையிலான காவல்துறையினர் ஜெயந்தியைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஜெயந்தியை சிறையில் அடைப்பதற்கான பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.