உலகம்: இலங்கை: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகனை நேரடியாக எதிர்கொண்ட ஒரே ஜனாதிபதி தான் தான் என்று கூறுகிறார் மகிந்த ராஜபக்ச! எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட்டு மக்கள் ஆணையுடன் மீண்டும் வருவோம் என சூளுரை!!

sen reporter
0


இலங்கையின் வரலாற்றில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களை நேரடியாக எதிர்கொண்ட ஒரே ஜனாதிபதி தான் தான் என்று கூறிய மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட்டு மக்கள் ஆணையுடன் மீண்டும் வருவோம் என சூளுரைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் முன்வரவில்லை. ஆனால், நான்தான் அவரை நேருக்கு நேர் எதிர்கொண்டேன். எனது ஆட்சிக் காலத்தின் பின்னரான காலப்பகுதியில், இலங்கையை ஆட்சி செய்த வேறு எந்தவொரு ஜனாதிபதியும் போரை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கையைக் கடந்த 2005 ஆம் ஆண்டு நான் ஏற்றுக்கொள்ளும் போதும் எமது கட்சி மீது பலர் சேறு பூசினார்கள். எனினும், நாடு இரண்டாகப் பிளவுபடுவதைத் தடுக்குமாறு மாத்திரமே அன்று மக்கள் என்னிடம் கோரினார்கள்.

முப்பது வருட ஆயுதப் போரில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை எந்தவொரு ஜனாதிபதியாலும் எதிர்கொள்ள முடியவில்லை.

சில ஜனாதிபதிகள் போரை நிறுத்துமாறு கோரி பிரபாகரனுக்கு ஆயுதங்களையும் வழங்கினார்கள்.

அந்த ஜனாதிபதி யார் என்று நான் கூற மாட்டேன். இவ்வாறான போரை எனக்குப் பின்னர் வந்த இலங்கையின் மற்ற ஜனாதிபதிகள் எதிர்நோக்கும் நிலையை நாம் உருவாக்கவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானமாக வாழக்கூடிய நிலையை நாம் ஏற்படுத்தினோம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த போது, குழந்தைகளாக இருந்தவர்கள், தற்போது போர் என்றால் என்ன என்று தெரியாத வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.

எனினும், மக்களை ஏமாற்றி தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகச் செயற்படும் தரப்பினர் இன்றும் இருக்கின்றார்கள்.

இவ்வாறானவர்கள் சர்வதேசத்தின் வலைகளில் சிக்கி எமது சொந்த நாட்டைப் பாதிப்படைய செய்கின்றார்கள்.

எமது கட்சியின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட பொருளாதார நிலை குறித்து தற்போதும் பலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
என்னைக் குற்றவாளியாக வெளிக்காட்டும் முயற்சிகளில் பலர் ஈடுபடுகின்றார்கள்.

2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாம் நாட்டின் பொருளாதாரத்தை 6 வீதத்தால் வளர்ச்சியடையச் செய்திருந்தோம்.
இந்தநிலையில், இலங்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல சரியானதொரு அரசியல் வழிநடத்தல் தேவை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை நாட்டை யாருடைய சொந்தத் தேவைக்காகவும் பிளவுபட நாம் இடமளிக்க மாட்டோம்.அனைத்து சவால்களையும் எதிர்நோக்கக்கூடிய ஒரே நாடு இலங்கை என்பதை சொல்வதில் நான் பெருமிதம் கொள்கின்றேன்.

எமக்குள்ள மக்கள் ஆணையுடன் எதிர்வரும் நாள்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் நாம் போட்டியிடுவோம். பாரிய வெற்றியையும் அடைவோம். எமது வெற்றிப் பயணத்தில் பங்கேற்க பல அரசியல் கட்சிகள் ஆர்வமாகக் காத்திருக்கின்றன  என்று கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top