தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் அவலநிலையால் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் பொதுமக்கள்.
பிடிஆர் காலனியில் சிறுவர் பூங்கா செயல்பட்டு வருவதை தொடர்ந்து அந்த பூங்காவில் சிறுவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள்வரை பயன்படுத்தி வருகின்றனர்.பல மாதங்களாக அந்த சிறுவர் பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளதால் புதர் மண்டி காட்சி தருகின்றன.
தூய்மையின்றி இருப்பதால் விஷப் பூச்சிகள் அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.மேலும்,சிறுவர் பூங்கா வாசலில் குப்பைகளோடு குப்பை வண்டிகள் நிறுத்தப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த நவம்பர்7ம் தேதி உத்தமபாளையம் சந்தோஷ் தியேட்டர் தெரு நுழைவு பகுதியில் கனமழை காரணமாக சாக்கடையானது சேதமடைந்து கழிவுநீர் வீதிக்குள் செல்லும் சூழல் ஏற்பட்டது.
சேதமடைந்த சாக்கடையால் சிறுபிள்ளைகளோ, வாகனத்தில் செல்பவர்களோ தவறி விழும் சூழல் தொடர்கிறது. இதுகுறித்து உத்தமபாளையம் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இந்நாள் வரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் பேரூராட்சி நிர்வாகத்தால் பொதுமக்கள் நாளுக்கு நாள் கொந்தளித்த வண்ணம் உள்ளனர். வரிகளை மட்டும் சரியாக வாங்க தெரிந்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய மறுப்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தேர்வலம் வருவதைபோல் உத்தமபாளையம் பேரூராட்சியில் மக்கள் கோரிக்கைகளை மதிக்காமல் பேரூராட்சியின் செயல் அலுவலர் உட்சபட்ச அதிகார தோரணையில் வலம் வருகிறார் என்றும் மக்கள் குற்றச்சாட்டை அடுக்கிக்கொண்டே செல்கின்றனர்.
மக்களின் கோரிக்கை அனைத்தும் ஏற்கப்படாததால் உத்தமபாளையம் நகர் மக்கள் வருகின்ற ஆட்சி எங்கள் கையில் என போர்க்கொடி தூக்கி வருகின்ற தேர்தல் மாற்றம் தருமா என எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர்.
உத்தமபாளையம் நகர மக்களுக்கு இந்த அரசு என்ன பதில் தரப்போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்