வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தில் கட்டட ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சோழவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி போன்ற நகராட்சிகளில் பணிபுரிந்தவர். தற்போது வேலூர் மாநகராட்சிக்கு பதவி உயர்வில் வந்து சேர்ந்து சுமார் 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்பொழுது வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தில் கட்டட ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இவர் இங்கு சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். ஒரு அரசு அதிகாரி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் பெற வேண்டும் என்பது அரசு விதி உள்ளது. அதையெல்லாம் புறம்தள்ளி அரசு விதிமுறைகளுக்கு முரணாக ஒரே இடத்தில் மூன்று வருடத்துக்கும் மேல் பணிபுரிந்து வரும் கட்டட ஆய்வாளரை இன்னமும் ஏன் பணியிட மாற்றம் செய்யவில்லை?.
அவர் செய்யும் முறைகேடான பணிகளுக்கு லஞ்சப் பணத்தை வசூலித்து மேலிடத்து அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி விட்டு ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்த பலே கில்லாடி. மேலும் ஏற்கெனவே அவர் வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தில் உதவி ஆணையர் (பொறுப்பு) வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது கூட அவர் முறைகேடுகளை செய்திருப்பார் என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள் போகப்போக என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள், காட்பாடி பகுதி வாழ் பொதுமக்கள்.
தற்போது கடைகோடி பாமரன் முதல் அரசு ஊழியர்கள் வரை வங்கிகளில் கடன் வாங்கி வீடு, கடைகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ள திட்டமிடுதல்கள், மாநகராட்சி மூலம் அனுமதி வழங்கப்படும் உரிய தகுதிச் சான்று, வங்கியில் சமர்ப்பித்தால்தான் கடன் உதவி பெற முடியும். ஆனால் வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தில் உள்ள கட்டட ஆய்வாளர் பிரிவில் கேட்கும் லஞ்சத்தால் வீடு கட்டுவோருக்கு உரிய சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக புதிய கட்டடம் கட்டுவோர் வேதனையை தெரிவிக்கின்றனர். தற்போது வீடு கட்டுவதற்கு சிமெண்ட், கம்பி விலை உயர்வு, மண் கிடைப்பதில் பெரும் சிரமப்பட்டு வரும் நிலையில் இது போன்ற கட்டட அனுமதி பெறுவதற்கு நடுத்தர வர்க்க மக்களின் கனவு கனவாகவே உள்ளது. நனவாக வாய்ப்பு கிடைக்காது போலிருக்கிறது. வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் கட்டடம் கட்டுபவர்கள், கட்டுமானத்தை தொடங்குவதற்கு முன் உள்ளூர்வாசி அல்லது திட்டமிடுதல் அதிகாரிகள் கட்டட அனுமதி திட்டங்களை அங்கீகரிக்கின்றனர். கட்டட அனுமதி பெறா விட்டால் சட்ட விரோதமாக கருதப்படும். கட்டட உரிமையாளர்கள் நேரடியாக தலையிடாத நிலையில் தங்களது கட்டடத்தை கட்டி வரும் சிவில் இன்ஜினியர்களை அணுகுகிறார்கள். சிவில் இன்ஜினியர்கள் மாநகராட்சி அதிகாரிகளை நேரடியாக தொடர்பு வைத்துக்கொண்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் கட்டட ஆய்வாளர்களிடம் இருந்து கட்டட ஒப்புதல் பெறுவதற்கு பெரும் தொகையை கொடுத்து ஒப்புதல் பெற்றுக் கொள்கின்றனர். கட்டட ஒப்புதல் பெறுவதற்கு லே-அவுட் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே பிளான் அப்ரூவல் இல்லாத மனைகளை உள்ளாட்சி அதிகாரிகளிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி கட்டட ஆய்வாளர்களிடம் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதில் பிளாட்டின் மதிப்பிற்கு ஏற்றவாறு ஏ.பி.சி .என்று பிரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. கட்டடம் ஒப்புதல் பெற பத்திரம் சொத்து மதிப்பீட்டின் சான்று, சொத்து PID எண், நகர ஆய்வு ஓவியம், சொத்து வரைபடங்கள், அடித்தள சான்றிதழ் புதுப்பித்தல், வரி ரசீதுகள் நில பயன்பாட்டு சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் கட்டிய வீட்டுக்கு கூடுதல் மின் இணைப்பு பெற தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்றாலும் கட்டட ஆய்வாளரிடம் ஆவணங்கள் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். அவர் சம்பந்தப்பட்ட வீட்டை நேரில் சென்று ஆய்வு செய்து அனுமதி அளித்த பிறகு மின் இணைப்பு பெற முடியும். அவ்வாறு விதிகள் உள்ள நிலையில் மாநகராட்சி 1வது மண்டலத்தில் கட்டட ஆய்வாளராக பணிபுரிந்து வரும் செந்தில் பல்வேறு ஆவண முறைகேடுகளில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது. அதாவது கையூட்டுப் பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று கட்டடங்களை ஆய்வு செய்யாமலேயே தனக்கு கீழ் பணி புரியும் கோகுல், பாஸ்கர் என்ற நபர்களை அனுப்பி கட்டட ஆய்வு செய்வதாக தெரிய வந்துள்ளது. அவர்களும் அவர்களது பங்குக்கு தனியாக ஒரு தொகையை கட்டட உரிமையாளரிடம் கேட்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி கட்டட ஆய்வாளர் செந்தில் அலுவலகத்திற்கு சரிவர வருவதில்லை. ஏனென்றால் அவரது சொந்த மாவட்டம், உள்ளூரில் வசித்து வருவதால் அவர் எப்போது வேண்டுமென்றாலும் வருவார் -போவாராம்.
இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு மேலாக அவர் அலுவலகத்திற்கு வருவதே இல்லையாம். அவருக்கு கீழ் பணிபுரிந்து வரும் நபர்கள் அரசு ஊழியரா அல்லது தற்காலிக ஊழியரா என்பது கூட பலருக்கும் தெரியாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. சில சமயம் அலுவலகத்தில் கட்டட ஆய்வாளர் செந்தில் இருக்கும் பொழுது மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சமூக ஆர்வலர்கள் அவரை நேரில் சென்று சந்தித்து கேள்வி எழுப்பினால் அவர் அரசல் புரசலாக பதில் கூறுவாராம். எனக்கு வரவேண்டிய வருமானம் அனைத்தும் மண்டல குழுத் தலைவர் பஞ்சாயத்து செய்து அவரே ஒரு தொகையை பார்த்து விடுகின்றார். வேறு என்ன மிஞ்சுகிறது. எனக்கு ஒன்றுமில்லை. எனக்கு இந்த மண்டலத்தில் பணியாற்றவே பிடிக்கவில்லை என மழுப்பலாக பதில் கூறிக் கொள்கிறார். இது சம்பந்தமாக சிலர் பெயர் குறிப்பிடாத கவுன்சிலர்கள் கூறுகையில், இடைத்தரகர்கள் போல் கூட செயல்படுகிறார்கள். வேலூர் மாநகராட்சியை பொருத்தவரையில் ஒவ்வொரு பிரிவிலும் அவரவர் சீட்டிற்கு ஏற்றவாறு கணிசமாக ஒரு தொகையை கையூட்டை தைரியமாக கேட்டு வாங்குகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஆளுங்கட்சிக்கு தான் மக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர்.
இந்த தகவல் அறிந்த சில பத்திரிகையாளர்கள் நேரில் சென்று கட்டட ஆய்வாளரிடம் முறைகேடான கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்துக் கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு கணிசமாக ரூ.500 முதல் 5000 வரை கவரில் போட்டு கொடுத்து வருகிறார். எனவே வேலூர் மாநகராட்சி 1வது மண்டலக் கட்டட ஆய்வாளர் பிரிவில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீரென்று நுழைந்து சோதனையிட்டால் பல்வேறு முறைகேடான ஆவணங்கள், லஞ்சப் பணங்கள் சிக்கக்கூடும் என்று கூறுகின்றனர் நம்பத் தகுந்த வட்டாரங்கள். இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

