தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 செல்போன்களை மீட்ட சைபர் குற்ற பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
எல்.பாலாஜிசரவணன் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
எல்.பாலாஜிசரவணன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.
அதன்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே மொத்தம் 775 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்படையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 செல்போன்களை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.
மேலும் இதுவரை 94,50,000 ரூபாய் மதிப்புள்ள 875 காணாமல் போன் செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசாரை பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர்கள் அச்சுதன், சுதாகரன் உட்பட சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.
