மதுரை: மேலூர்-கொடிக்குளம்: ஆயிரம் குழந்தைகளுக்கு அம்மா! அரசுப்பள்ளிக்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் தந்த ஆயி பூரணம்மாள்! நேரில் நன்றி தெரிவித்த அமைச்சர் உதயநிதி!

sen reporter
0


 ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான தனது இடத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய ஆயி என்கிற பூரணம் அம்மாளை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீடு தேடிப்போய் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.


மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் கருணை அடிப்படையில் கிடைத்த வேலையில் இருந்து வருகிறார். தற்போது  மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் பணியாற்றி வருகிறார்.


பூரணத்தின் மகள் ஜனனி (30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தங்கள் நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். 



பூரணம் அம்மாள் இல்லத்தில் உதயநிதிபூரணம் அம்மாள் இல்லத்தில் உதயநிதி

இந்த செய்தி அறிந்ததும் தமிழக மக்கள் பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள். மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இவரது பணியிடத்திற்கு தேடிப் போய் சந்தித்து நன்றி கூறினார்.


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் நன்றி தெரிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் பூரணம் அம்மாளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு குடியரசு தின விழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.


இந்த நிலையில்  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக மதுரை வந்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  பூரணம் அம்மாளை தேடிப்போய் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "அழியா கல்வி செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.



மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக இந்த மகத்தான சேவையை செய்திருக்கும் அவருக்கு, குடியரசு தினத்தன்று  முதலமைச்சரின் சிறப்பு விருதினை அறிவித்துள்ள நிலையில், நாம் நினைவுப்பரிசை வழங்கி அவரை கவுரவித்தோம். அவரின் மகளுடைய திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். ஆயி அவர்களின் கல்விக்கான அரும்பணி காலத்திற்கும் நிலைத்திருக்கும்" என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top