விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மருந்துக் கலவை உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் நிகழ்வு இடத்தில் பலியாயினர்.
விருதுநகர் அருகே வச்சா காரப்பட்டி பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் இன்று காலை 10.30 மணி அளவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பட்டாசுக்கான மருந்து தயாரிப்பு அறையில், உராய்வுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையில் பணியில் ஈடுபட்டிருந்த கன்னிசேரிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் மகன் காளிராஜ் (20), முதலிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் வீரக்குமார் (50) ஆகியோர் சம்பவ இடத்திலியே உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கன்னி சேரி புதூரை சேர்ந்த சரவணகுமார் (25), இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (17) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
