தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் வீரமாமுனிவருக்கு ஒருகோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று (22.01.2024) திறந்து வைத்தார்கள்.
தமிழ் அகராதியின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 8ஆம் நாளில் அரசு சார்பில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
வீரமாமுனிவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வீரமாமுனிவர் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவுகூறும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக மணிமண்டபம் மற்றும் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்கள்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.ஆர்.செல்வராஜ், செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பசலிக்கா அருட்தந்தை அந்தோணிகுரூஸ் அவர்கள் ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (க(ம)ப) (பொ) வெள்ளைச்சாமிராஜ், கயத்தாறு வட்டாட்சியர் நாகராஜ், கோவில்பட்டி நகராட்சித் தலைவர் கருணாநிதி, கயத்தாறு பேரூராட்சித் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்துரிசுப்புராஜ், காமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கலைசெல்வி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிரியாகுருராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மகாலட்சுமி மாரியப்பபன், தேவிகண்ணன், செல்வக்குமார், கொம்பையா, ஆதிலட்சுமி, கோவில்பட்டி நகராட்சி 22வது வார்டு உறுப்பினர் ஜாஸ்மின் லூர்துமேரி மற்றும் காமநாயக்கன்பட்டி ஊர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
