மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த அணிகேட் ராம்பிரோஸ் என்பவர், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு கட்டட வேலைக்காக வந்துள்ளார்.
பரமக்குடிஅரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்று தனியாக கிளினிக் நடத்தி வரும் கிருஷ்ணவேணி என்பவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட ராம்பிரோஸ், வீட்டிற்குள் புகுந்து கிருஷ்ணவேணியின் கை கால்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 37 சவரன் நகை மற்றும் 12 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளார்.
திருட்டு தொடர்பாக கிருஷ்ணவேணி பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
திருடனின் கை ரேகைகளை பதிவு செய்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தேடி வந்த நிலையில், ஆதார்கார்டு மூலம் முகவரியை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில் ஐந்து காவலர்கள் மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர். இந்த இடத்தில் தீரன் திரைப்படம் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.
பரமக்குடியில் இருந்து ரயில் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்திற்கு மூன்றாயிரம் கிலோமீட்டர் கடந்து சென்று ஒரு வாரம் தங்கி பெரும் முயற்சி எடுத்து பதுங்கி இருந்த திருடன் அணிக்கேட் ராம்பிரோஸை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்பொழுது அவருடைய உறவினர்கள் காவலர்களை சுற்றி வளைத்தனர். அப்பொழுது அவுரங்கபாத் பகுதி காவலர்களின் உதவி இவர்களுக்கு கிடைக்க, தமிழக காவல்துறையினர் திருடன் அணிகோட் ராம்பிரோச் உடன் கார் மூலம் பரமக்குடிக்கு வந்தனர்.
பின்னர் பரமக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்திவிட்டு இராமநாதபுரம் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
