இந்நிலையில், "UYIR Road Safety Hackathon-2025"-ன் துவக்க விழா கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், உள்ளிட்ட அதிகாரிகள், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, UYIR நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன், UYIR அறங்காவலரும் சாலை பாதுகாப்பு ஹேக்கத்தானின் திட்டப் பொறுப்பாளருமான மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உரையில், கோயம்புத்தூரில் இத்தகைய முயற்சி முன்னெடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றார். கல்வி, மருத்துவம், தொழிற்துறை என எல்லாவற்றிலும் கோவை சிறந்து விளங்குகிறது என்று கூறிய அவர், விபத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இருப்பது கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சனை என்றார். தொடர்ந்து, சாலை பாதுகாப்பிற்காக தமிழக அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் அதன் பலன்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த ஹாக்கத்தான் தொழிநுட்ப ரீதியில் புதுமையான மனபோக்கு கொண்ட செயல்பாட்டாளர்களை ஒன்று கூட்டி மாநகரின் சாலைகளை அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகளாக மாற்றுவதில் அமையும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைய உள்ளது. மேலும், இந்த ஹேக்கத்தான் நிகழ்வில், தொழில்முறை நிபுணர்கள், மாணவர்கள், சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான மொத்த பரிசு தொகை ரூபாய் 6.50 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மாணவர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்கள் ஆகிய இரு பிரிவுகளுக்கான பரிசுகள் தனித்தனியே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.