சங்கரன்கோவில் தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 25 வது ஆண்டை நிறைவு செய்வதை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் வெள்ளி விழாவை நடத்தியது. இவ்விழாவினையொட்டி காலையில் பேராசிரியர் தொ.ப பவள விழா தமிழ் வழிக் கல்விக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கருத்தரங்கத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சோ. மோகனா தலைமை தாங்கினார். சென்னை அம்பத்தூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் சிவ காளிதாசன் முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் நாராயணன் வரவேற்புரை ஆற்றினார். ஆங்கில ஆசிரியர் இளங்கோ கண்ணன் அறிமுக உரை நிகழ்த்தினார். கருத்தரங்கத்தில் 'தமிழ் வழியில் மருத்துவக் கல்வி' எனும் தலைப்பில் தமிழ்நாடு அரசின் மருத்துவ நூல்கள் மொழிபெயர்ப்புக் குழு உறுப்பினர் எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன் கருத்துரை ஆற்றினார். 'தமிழ்வழிக் கல்வியும் படைப்பாற்றலும்' எனும் தலைப்பில் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முனைவர் சங்கர்ராம் உரையாற்றினார்.
சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா ஈஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் தேவி நன்றி கூறினார். தாய்த்தமிழ்ப் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவிற்கு சங்கரன்கோவில் திருவள்ளுவர் கழகத் தலைவர் கி. சுப்பையா தலைமை தாங்கினார். அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கந்தசாமி முன்னிலை வகித்தார். தாய்த்தமிழ்பள்ளியை நிர்வகிக்கும் திருக்குறள் தமிழோசை அறக்கட்டளையின் நிறுவனர் சதீஷ் கனக குரு வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் அறம், எழுத்தாளர் கண்மணி ராசா சிறப்புரையாற்றினர்.
திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி தாளாளர் தங்கராசு, கவிஞர் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் வெண்மதி வேந்தன், முத்துமாரி முருகன் ஆசிரியர் முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கரநாராயணன் நன்றி கூறினார். பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சிலம்பாட்டம், நாட்டுப்புற நடனம், கதை சொல்லல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.முன்னாள் மாணவி வனமதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சாந்தி உதவியாசிரியர்கள் வன்னிவிநாயகி, சங்கராவுடையம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.